பங்கு சந்தை வீழ்ச்சி; சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவு

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்து 75,811.12 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 182.05 புள்ளிகள் சரிவடைந்து 23,150.30 புள்ளிகளாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சமீபத்திய வரிவிதிப்பு அறிவிப்பானது, உலக அளவில் எதிரொலித்து வர்த்தக சரிவு ஏற்பட்டு உள்ளது. இது இந்திய பங்கு சந்தைகளிலும் இன்று பிரதிபலித்து உள்ளது. முதலீட்டாளர்கள் எதிர்மறையாக வினையாற்றி உள்ளனர். அவர்கள் தங்கம் போன்ற சொத்துகளை பாதுகாப்பான சொத்துகளாக மாற்றி உள்ளனர். இதனால், பங்குகள் விற்பனையும் சிக்கலாகி உள்ளது.

இதுபற்றி வங்கி நிபுணரான அஜய் பாக்கா கூறும்போது, ஏற்றுமதிக்கான சரிவால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, அமெரிக்க டாலர் உள்ளிட்டவை இந்தியா மீது தாக்கம் ஏற்படுத்தும். இதனால், முதலீட்டாளர்கள் பலரும் தங்கம், யென், சுவிஸ் பிராங்க் மற்றும் ஜப்பானிய அரசு பத்திரங்கள் என பாதுகாப்பான சொத்துகளுக்கு மாறியுள்ளனர் என கூறுகிறார்.

நிப்டியில் தானியங்கி துறை 1.25 சதவீதம், தகவல் தொழில் நுட்ப துறை 1.67 சதவீதம் மற்றும் உலோக துறை 0.81 சதவீதம் என்ற அளவில் பங்குகள் சரிவை கண்டுள்ளன. எனினும், மருந்து பிரிவு இதில் விதிவிலக்காக உள்ளது. 2.95 சதவீதம் லாபத்துடன் உள்ளது. டிரம்பின் வரிவிதிப்புகள் இந்த பிரிவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

இதேபோன்று ஆசிய பங்கு சந்தைகளிலும் எதிர்மறையான நிலையே காணப்பட்டது. ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங் செங், தென்கொரியாவின் கொஸ்பி ஆகிய குறியீடுகள் சரிவை சந்தித்து இருந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைந்து உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் குறைந்து ரூ.85.78 ஆக என்ற அளவில் உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.