மேற்கு வங்கத்தில் 25,000+ ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முறைகேடான முறையில் ஆசிரியர் நியமனங்கள் நடந்திருப்பதால் இது மோசடிக்குச் சமம் என்று தெரிவித்தது. நீதிபதிகள் கூறுகையில், “முறைகேடாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்கு சரியான காரணம் எதையும் நாங்கள் இதில் காணவில்லை. பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பதால் இது ஒரு மோசடியாகும்.” என்று தெரிவித்தது.

என்றாலும் ஏற்கெனவே பணி நியமனம் பெற்றவர்கள் இதுவரை வாங்கிய ஊதியத்தைத் திருப்பித் தரவேண்டியது இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி இந்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறுத்தி வைத்திருந்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு முகமை அதன் விசாரணையைத் தொடர்வதற்கு அனுமதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பின்னணி: மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர் பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 25 ஆயிரத்து 753 பேருக்கு ஆசிரியர் பணிக்கான நியமன ஆணையை மாநில அரசு வழங்கியது.

இந்த ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், பலர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை பெற்றதாகவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ல் தீர்ப்பு வழங்கிய கொல்கத்தா உயர் நீதிமன்றம், 25 ஆயிரத்து 753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த ஊழல் வழக்கில், முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, திரிணமூல் கட்சி எம்எல்ஏகள் மானிக் பட்டாச்சாரியா மற்றும் ஜிபான் கிருஷ்ண சாஹா உள்ளிட்டோர் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.