Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 அணிகளுமே வெவ்வேறு விதங்களில் தோற்றமளிக்கும் சூழலில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் வரை வருவார் என்பதையே இப்போது சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது.
IPL 2025: 10 அணிகளும் முரட்டு பலத்தில்…
பஞ்சாப், டெல்லி அணிகளை தவிர அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகளை விளையாடிவிட்டன. இதில் இந்த 8 அணிகளுமே குறைந்தபட்சம் 1 தோல்வியையும், 1 வெற்றியையும் பெற்றிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. பஞ்சாப், டெல்லி அணிகள் தலா 2 போட்டிகளை விளையாடி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை எனலாம்.
Chennai Super Kings: மோசமான நிலையில் சிஎஸ்கே
இதில் 5 முறை கோப்பைகளை வென்ற மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் இரண்டுமே 1 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பெற்றுள்ளன. மும்பை அணியில் காம்பினேஷனுக்கு தற்போது பிரச்னையில்லை, பும்ராவும் வந்து சேர்ந்துவிட்டால் அந்த அணியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், சிஎஸ்கே அணியின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.
Chennai Super Kings: பந்துவீச்சில் இதுபோதும்!
எப்போதும் சிஎஸ்கேவில் பந்துவீச்சை விட பேட்டிங்கே பலமாக இருக்கும். ஆனால், இந்த முறை தலைகீழாக இருக்கிறது எனலாம். பந்துவீச்சு சிறப்பாகவே இருக்கிறது. பவர்பிளேவில் கலீல் அகமது, மிடில் ஓவர்களில் நூர் அகமது, டெத் ஓவர்களில் பதிரானா என சிறப்பாக தாக்குதல் இருந்தாலும் கூடுதலாக ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளரை சேர்த்துக்கொண்டால் பிரச்னையே இருக்காது எனலாம்.
Chennai Super Kings: சொதப்பல் பேட்டிங் ஆர்டர்
பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் ரச்சின் ரவீந்திரா, கெய்க்வாட் மட்டுமே நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். தூபேவுக்கு இன்னும் சரியான இன்னிங்ஸ் அமையவில்லை. ஜடேஜா, அஸ்வின், தோனி ஆகியோரும் பின்வரிசையில் இருப்பதால் ஒரு அதிரடி வீரர் இல்லாமல் சிஎஸ்கே தவிக்கிறது. அதேபோல், ராகுல் திரிபாதி, ஹூடா, விஜய் சங்கர் உள்ளிட்டோரையே சிஎஸ்கே நம்பியிருப்பது அவர்களுக்கு சரியல்ல இளம் வீரர்களை சேர்த்தாலே ஓரளவுக்கு நம்பிக்கை கிடைக்கும் எனலாம்.
Chennai Super Kings: சிஎஸ்கே முகாமில் ஆயுஷ் மாத்ரே
அந்த வகையில், கடந்தாண்டு ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே தொடர்களில் மும்பை அணிக்காக அறிமுகமான 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே அணி பேட்டிங் சோதனைக்காக தற்போது அழைத்திருப்பது பலரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது. பல இளம் வீரர்கள் சிஎஸ்கேவில் இருந்தாலும் சரியான இளம் ஓபனர்கள் யாரும் இல்லை எனலாம். சோதனைக்காக ஆயுஷ் ராஜ்கோட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மண்டல முகாமில் இருந்து சென்னை வந்துள்ளார்.
Chennai Super Kings: சிஎஸ்கேவில் யாருக்காவது காயமா?
ஆயுஷ் மாத்ரே ஏலத்தில் யாராலும் எடுக்கப்படவில்லை. ஏலத்தில் எடுக்கப்படாதவரை அணிக்குள் சேர்க்க வேண்டும் என்றால் தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டிருந்து, அவருக்கான மாற்று வீரராகவே எடுக்க முடியும். உதாரணத்திற்கு, மேஷின் கானுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் எடுக்கப்பட்டது போல்…
Chennai Super Kings: சிஇஓ காசி விஸ்வநாதன் சொன்னது என்ன?
அந்த வகையில், சிஎஸ்கேவில் யாருக்காவது காயம் ஏற்பட்டுவிட்டதா? எதற்கு ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே முகாமிற்கு வந்துள்ளார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில், சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் ஊடகம் ஒன்றிடம்,”ஆமாம், நாங்கள் அவரை சோதனைக்காக அழைத்திருக்கிறோம். அவர் எங்கள் குழுவை கவர்ந்திருக்கிறார். (காயங்கள்) ஏதுமில்லை; ஏதேனும் தேவை இருந்தால், நாங்கள் அதற்கேற்ப செய்வோம். நாங்கள் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை, இது ஒரு சோதனை மட்டுமே” என்றார்.
Chennai Super Kings: யார் இந்த ஆயுஷ் மாத்ரே?
ஆயுஷ் மாத்ரே கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் 4வது இடத்தை பிடித்தார். 16 இன்னிங்ஸில் 504 ரன்களை அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் 458 ரன்களை குவித்துள்ளார். அதேபோல், லிஸ்ட் ஏ தொடரில் 150+ ரன்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த சாதனையை வைத்திருந்தார்.