புதுச்சேரி: `போக்சோ, வழிப்பறி ரௌடிகளுக்காக போராட்டம் நடத்துகிறார் நாராயணசாமி’ – சபாநாயகர் அதிரடி

புதுச்சேரி பஞ்சாயத்ராஜ் அமைப்பின் தலைவரை அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக குற்றம் சுமத்திய காங்கிரஸ் கட்சியினர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று முன்தினம் தவளக்குப்பத்தில் போராட்டம் நடத்தினர். காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் புதுச்சேரி – கடலூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு போலீஸார் அவர்களை கைது செய்த பிறகே, நிலைமை சீரானது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், “தேசிய நெடுஞ்சாலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நடத்திய போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும், மருத்துவமனைக்கும் சென்ற 3 ஆம்புலன்ஸ்கள் பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

சம்பவத்தின் உண்மை நிலையை அறியாமலேயே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் நடத்தியுள்ளார். கடந்த 27-ம் தேதி ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆனந்த், பாலா, சம்பத் ஆகிய மூன்று பேர் மது அருந்திவிட்டு அப்பகுதியில் வந்த சுற்றுலாப் பயணிகளை மிரட்டி தாக்கினர். அதன்பேரில் வந்த புகாரையடுத்து போலீஸார் அங்கு சென்றனர். ஆனால் அவர்கள் அந்த போலீஸாரையும் மிரட்டினர்.

இதையடுத்து எஸ்.ஐ தலைமையில் சென்ற போலீஸார் அவர்களை மடக்கி பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். அப்போது ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அமைப்பின் மாநில தலைவர் அமுதரசன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்து வாதாடினார். காவல்நிலையம் பெஞ்சில் அமர்ந்து காலை நீட்டியப்படி தகாத வார்த்தையால் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை திட்டினார்.

அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. ரௌடிகள் மீது போக்சோ, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களுக்கு ஆதரவாகத்தான் முன்னாள் முதலமைமைச்சர், எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பொதுமக்களுக்கு இடையூறு தந்து போராடியுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். அங்கு பேசிய நாராயணசாமி ரெஸ்டோபார்களால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக குற்றம் சாட்டினார்.

ரெஸ்டோபார்களை முதலில் ஆரம்பித்தது காங்கிரஸ்தான். அதிலும் மதகடிப்பட்டு பகுதிகளில் விதிகளை மீறி வயல்வெளிகளில் முதல் முறையாக 3 ரெஸ்டோ பார்கள் காங்கிரஸ் ஆட்சியில்தான் தரப்பட்டது. முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு 3 ரெஸ்டோபார்களை எந்த விதிமுறையும் பின்பற்றாமல் வழங்கினார்கள். ஆனால் இப்போது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நாராயணசாமி பேசி வருகிறார்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் போராட்டத்தை காவல்துறை வேடிக்கை பார்க்கக் கூடாது. சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் ஜாமீனில் வெளிவராத வகையில் வழக்குகளை பதிவு செய்யவேண்டும். இதுதொடர்பாக கவர்னர், முதலமைச்சர், போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளேன். முதல் அமைச்சர் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்.

அதனால் இது போன்ற விஷயங்களில் நிதானமாக செயல்படுவார். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் போராட்டங்களையும், அரசியல் நாடகத்துக்கான போராட்டங்களையும் இனியும் போலீஸார் வேடிக்கை பார்க்கக் கூடாது. பட்ஜெட்டில் முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்கள் வாரி இறைத்துள்ளார். அதில் பயந்துபோய்தான் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸார் போராட்டம் நடத்துகின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.