சென்னை: எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் சார்பில் ‘சொல் தமிழா! சொல்! 2025’ எனும் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா சென்னையில் வரும் 6, 7-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழா காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகவளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ.கணேசன் கலையரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் அனைத்து மாவட்டங்களும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய 9 மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், மாநில அளவிலான இறுதிப்போட்டிக்கான இரண்டு சுற்றுகள் நாளையும் (ஏப். 6), இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா 7-ம் தேதியும் நடைபெறவுள்ளது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையில் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில், SRMIST வளாக நிர்வாகி இரா.அருணாச்சலம் வரவேற்புரையாற்றுகிறார். தமிழ்ப் பேராயத்தின் தலை வர் முனைவர் கரு.நாகராசன் அறிமுக உரையாற்றுகிறார்.பேராசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கு.ஞானசம்பந்தன் வாழ்த்துரை வழங்குகிறார்.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
முதல் பரிசு ரூ.5 லட்சம்: மாநில அளவில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2-ம் பரிசாக ரூ.3 லட்சம், 3-ம் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.40 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் பிரின்ட் மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், மீடியா பார்ட்னராக புதிய தலைமுறை, வேந்தர், புதுயுகம் தொலைக்காட்சிகள் இணைந்துள்ளன.