முல்லாப்பூர்,
18-வது ஐ.பி.எல். தொடரில் முல்லாப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் நேஹல் வதேரா 62 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்திற்கு முன்னதாக கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்திருந்தார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்திருந்த கேப்டன்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த சென்னை முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியை (7 வெற்றிகள்) முந்தி, ஷேன் வார்னேவுடன் 2-வது இடத்தை பகிர்ந்திருந்தார். இன்னும் 3 வெற்றிகள் பெற்றிருந்தால் முதலிடத்தில் இருந்த கம்பீரை (10 வெற்றிகள்) முந்தி தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்திருப்பார்.
ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் அந்த மாபெரும் சாதனை படைக்கும் வாய்ப்பை ஸ்ரேயாஸ் தவறவிட்டுள்ளார்.