புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 3ம் தேதி உறுதி செய்த நிலையில், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிடக் கோரி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் முழு செயல்முறையையும் செல்லாது என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் 22-ம் தேதி அறிவித்தது. அந்த தீர்ப்பை, கடந்த 3-ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பணி நியமனம் பெற்ற அனைவருமே முறைகேடான முறையில் பணிவாய்ப்பை பெற்றவர்கள் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பணி நியமனம் பெற்றவர்களில் நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், நியாயமற்ற வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரும் இருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
ஆட்சேர்ப்பின் போது செய்யப்படும் எந்தவொரு குற்றமும் கண்டிக்கப்பட வேண்டும், மேலும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இருப்பினும், நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை கறைபடிந்த ஆசிரியர்களுக்கு இணையாக நடத்துவது கடுமையான அநீதியாகும்.
அவர்களை பணியில் இருந்து நீக்குவது லட்சக்கணக்கான மாணவர்களை, போதுமான ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகளுக்குள் தள்ளும். அவர்களின் பணிநீக்கம் அவர்களின் மன உறுதியையும் சேவை செய்வதற்கான உந்துதலையும் அழித்துவிடும். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு பெரும்பாலும் ஒரே வருமான ஆதாரமாக இருக்கும் ஒன்றை இழக்கச் செய்யும்.
நீங்கள் ஒரு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளீர்கள். இந்த அநீதியை, மகத்தான மனித இழப்பை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பணியில் தொடர அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
பின்னணி: மேற்குவங்கத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழலில் மேற்குவங்க முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, திரிணமூல் எம்எல்ஏ.க்கள் மானிக் பட்டாச்சார்யா, ஜிபன் கிருஷ்ண சாகா ஆகியோர் சிக்கினர்.
இந்த நியமனத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் 22-ம் ரத்து செய்தது. ஆசிரியர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, சிபிஐ விசாரணை ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் தடை விதித்தது. இதன் விசாரணை கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கியது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் கடந்த 3ம் தேதி தீர்ப்பளித்தனர். அதில் கூறியதாவது: ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து, 3 மாதத்துக்குள் மீண்டும் தேர்வு செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள், மோசடிகள் மிகப் பெரியளவில் நடைபெற்றுள்ளன. இந்த தேர்வு முறையில் நம்பகத்தன்மை நீர்த்துபோய் விட்டது. உயர்நீதிமன்ற உத்தரவில் சில மாற்றங்களை மட்டும் செய்கிறோம். நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தை திருப்பிச் செலுத்த தேவையில்லை. மாற்றுத்திறனாளிகள் மட்டும் பணியில் தொடரலாம். மாநில அரசு 3 மாதத்துக்குள் ஆசிரியர்களை புதிதாக தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.