காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் 93 வயதில் உடல் நலக் குறைவால் மரணித்துள்ளார்.
சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவந்த அவர், மரணமடைந்ததாகத் தனது எக்ஸ் தள பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் அவரது மகளும், பா.ஜ.க தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன்.

காங்கிரஸ் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவரான குமரி அனந்தன், 1977ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
சாத்தான்குளம், ராதாபுரம், திருவெற்றியூர் ஆகிய தொகுதிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்ட இவர், அரசியல் பயணத்தில் காந்தி காமராசர் தேசிய காங்கிரஸ் என்ற தனிக்கட்சியையும் தொடங்கி வெற்றி பெற்றுள்ளார். பின்னர் அந்த கட்சியைக் காங்கிரஸுடன் இணைத்தார்.
இவர் மறைந்த தொழிலதிபர் எச்.வசந்தகுமாரின் அண்ணன். தற்போதைய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் பெரியப்பா.
நீண்ட அரசியல் வாழ்க்கையைக் கொண்டுள்ள இவர், காமராஜரின் சீடராகக் கருதப்பட்டார். எதிலும் தமிழுக்கு முதலிடம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பனை பாதுகாப்பு, மது விலக்கு எனப் பல்வேறு கோரிக்கைகளுக்காகக் காத்திரமான போராட்டங்களை, பாத யாத்திரைகளை நடத்தியுள்ளார்.
இவருக்கு தி.மு.க அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்தது.
குமரி அனந்தன் மறைவு குறித்து மகள் தமிழிசை சௌந்தரராஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்… இன்று என் அம்மாவோடு.. இரண்டறக் கலந்து விட்டார்…
குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது…

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார். என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும்.
தமிழக அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ. அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம்.
உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்..
உங்கள் ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா. தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்….
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs