உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கில் தோனி செய்த மகத்தான சாதனை..!

MS Dhoni, IPL Records : ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி, ஐபிஎல் போட்டிகளில் புதிய3 வரலாறு படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டியில் இந்த பெரிய சாதனையைப் படைத்தார். ஐபிஎல் 2025 தொடரின் 22வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது. முல்லன்பூரில் (புதிய சண்டிகர்) உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், எம்.எஸ். தோனி 12 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 27 ரன்கள் எடுத்தார். ஆனால், அவரால் சிஎஸ்கே அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. இந்தப் போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்தாலும், ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஒரு பெரிய சாதனையைப் படைத்தார். 

தோனி படைத்த வரலாறு

பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது தான் இந்த சாதனையை படைத்தார் எம்எஸ் தோனி. அஸ்வின் 8வது ஓவரை வீசும்போது, அப்போது ஸ்டிரைக்கில் இருந்தார் நேகல் வதேரா. அவர் அஸ்வின் பந்தை அடித்து ஆட முற்பட்டபோது அந்த பேட்டின் விளிம்பில் பட்டு கேட்சாக விக்கெட் கீப்பராக இருந்த எம்எஸ் தோனி கையில் தஞ்சம் புகுந்தது. இந்த கேட்சை பிடித்தபோது தான் தோனி புதிய வரலாறு ஒன்றை படைத்தார். இந்த ஒரே ஒரு கேட்ச் மூலம், ஐபிஎல்லில் 150 கேட்சுகளை எடுத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றார்.

தோனி கேட்ச் ரெக்கார்டுகள்

ஐபிஎல் வரலாற்றில் 100க்கும் மேற்பட்ட கேட்சுகளை பிடித்த ஒரே விக்கெட் கீப்பர்கள் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் (137) மட்டுமே. ஒட்டுமொத்தமாக, ஐபிஎல்லில் தோனி 154 கேட்சுகளைப் பிடித்துள்ளார், அவற்றில் நான்கு கேட்சுகளை அவர் ஒரு ஃபீல்டராகப் பிடித்துள்ளார். 2008 மற்றும் 2009 சீசன்களில், சூப்பர் கிங்ஸ் அணிக்காக பார்த்திவ் படேலுடன் தோனி விக்கெட் கீப்பிங் பணியை பகிர்ந்து கொண்டார். 2008 ஆம் ஆண்டு நவி மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் விக்கெட் கீப்பர் அல்லாதவராக தோனி பிடித்த ஒரு கேட்சும் இதில் அடங்கும்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள்

எம்.எஸ். தோனி – 150
தினேஷ் கார்த்திக் – 137
விருத்திமான் சஹா – 87
ரிஷப் பந்த் – 76
குயின்டன் டி காக் – 66

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து லீக்குகளிலும் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி பிடித்த கேட்ச் ரெக்கார்டு இதுவாகும். இதில் 146 கேட்சுகள் விக்கெட் கீப்பராகப் பிடிக்கப்பட்டுள்ளன. சுரேஷ் ரெய்னா 110 கேட்சுகளுடன் அந்த அணியின் இரண்டாவது அதிகபட்ச கேட்சுகளில் உள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பரால் அதிகம் பேரை ஆட்டமிழக்க செய்தவர் (311) என்ற சாதனையை தோனி வைத்துள்ளார், 221 கேட்சுகள் மற்றும் 90 ஸ்டம்பிங்குகளுடன். குயின்டன் டி காக் (305 அவுட்டுகள்) பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். உலகளவிலும் இந்த சாதனையில் தோனியே முதல் இடத்தில் இருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.