Viral Reels: சிங்கத்தோட ஒரே தட்டுல பிரியாணி; புலியோட வாக்கிங்… காட்டுயிர்களா; செல்லப் பிராணிகளா?

சோஷியல் மீடியாவை ஓப்பன் பண்ணாலே ஆளாளுக்கு சிங்கம், புலி வளர்க்கிறாங்க. பார்க்குறதுக்கே பக்குனு இருக்கு. சவுதி அரேபியாவுல, ஐக்கிய அரபு நாடுகள்ல இருக்கிற ராஜ குடும்பங்கள்ல, பெரும் பணக்காரக் குடும்பங்கள்ல தங்களோட செல்வாக்கு மற்றும் கம்பீரத்துக்கு அடையாளமா சிங்கங்களையும் புலிகளையும் செல்லப்பிராணிகளா வளர்த்திட்டிருக்காங்களாம்.

நேத்திக்கு (08-04-25) இந்தியா வந்த துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான்கூட ஒரு அனிமல் லவ்வர் தான். குட்டிக்குட்டியா இருக்கிற சிம்பன்சிகள்ல ஆரம்பிச்சி நிறைய விலங்குகளை வளர்த்துட்டிருக்கார். கூடவே மோச்சி (Moochi) என்கிற வெள்ளை நிற முடிகளோட இருக்கிற சிங்கத்தையும் செல்லப்பிராணியா வளர்த்துட்டிருக்கார்.

மோச்சியை செல்லப்பிராணியா வளர்க்க ஆரம்பிச்ச ஹம்தான், 2019-லேயே தன்னோட இன்ஸ்டாகிராம்ல நாட்டு மக்களுக்கு மோச்சியை அறிமுகப்படுத்தியிருக்கார். இப்ப மோச்சி கம்பீரமா வளர்ந்து நிக்குது. பட்டத்து இளவரசர் கூட புல்வெளியில விளையாடுறது, படுக்கையில படுத்துக்கிட்டு மாமிசம் சாப்பிடுறதுன்னு பயங்கர செல்லம் கொஞ்சிட்டு இருக்குது.

காட்டுயிர்களா; செல்லப்பிராணிகளா?
காட்டுயிர்களா; செல்லப்பிராணிகளா?

பரந்த புல்வெளியில இரும்புக்கம்பிகளை அடிச்சு, அதுல சங்கிலிகளால சிங்கம், புலிகளைக் கட்டிப்போட்டு வச்சிருக்கிறாங்க.

‘Visiting the Royal Family of Dubai’ங்கிற தலைப்புல துபாயின் அரச குடும்பத்தோட அரண்மனை டூர் ஒண்ணு சோஷியல் மீடியாவுல ரொம்ப ஃபேமஸ். அடிக்கடி கண்ணுல படுற அந்த வீடியோவுல, அரண்மனை வளாகத்துல வெள்ளை மற்றும் வழக்கமான நிறத்துல இருக்கிற பல சிங்கம், புலிகளை பரந்த புல்வெளியில இரும்புக்கம்பிகளை அடிச்சு, அதுல சங்கிலிகளால கட்டிப்போட்டு வச்சிருக்கிறாங்க. சிங்கம், புலிகளுக்கு புட்டிப்பால் கொடுத்து பராமரிக்கிறதுக்கு எக்கச்சக்க ஊழியர்களும் இருக்கிறாங்க. பார்க்கிறப்போவே குறைந்தபட்சம் 100, 150 கிலோவாவது இருக்கும்னு நாம நினைக்கிற சிங்கம், புலிகளை அவங்க சின்னக்குட்டிங்கன்னு அந்த வீடியோவுல அறிமுகப்படுத்துவாங்க. இந்த சிங்கம், புலிகளை அடைச்சு வைக்க அங்கே நிறைய இரும்புக்கூண்டுகளும் இருக்கிறதையும் அந்த வீடியோவுல பார்க்க முடியுது.

நம்ம கண்ணுல படுற நிறைய ரீல்ஸ்ல வெள்ளை சிங்கம், வெள்ளை புலிகளோட கொஞ்சி விளையாடுறது இவர்தான்.

அடுத்து, ஹமீது அப்துல்லா அல்புகைஷ் (Humaid Abdulla Albuqais). இவர் ஒரு இன்ஃப்ளூவென்சர். ஐக்கிய அரபு நாடுகள்ல இருக்கார். 7 மில்லியன் பேர் இவரை இன்ஸ்டாவுல ஃபாலோ பண்ணிட்டிருக்காங்க. நம்ம கண்ணுல படுற நிறைய ரீல்ஸ்ல வெள்ளை சிங்கம், வெள்ளை புலிகளோட கொஞ்சி விளையாடுறது இவர்தான். சோபாவுல உட்கார்ந்திருந்தாலும் சரி, பெட்ல படுத்திருந்தாலும் சரி, இவரைச்சுத்தி எந்நேரமும் ரெண்டு மூணு புலி அல்லது ரெண்டு மூணு சிங்கம் அவர் மேல ஏறி இறங்கி விளையாடிட்டு இருக்கும். ஒரே நேரத்துல மூணு சிங்கம் அவரை நக்கி நக்கி கொஞ்சுறப்போவும், அவர் மேல சாய்ஞ்சிக்கிட்டு கொஞ்சுறப்போவும் எங்க நசுங்கி போயிடுவாரோன்னு பயமா இருக்கும்.

புலியோட வாக்கிங்
புலியோட வாக்கிங்

சிங்கம், புலி, சிறுத்தைகளோட சேர்ந்து குளிக்கிறது, இவரைப் பார்த்தாலே ஓடி வந்து இடுப்புல ஏறிக்கிற சிம்பன்சிக்கு லிப் கிஸ் கொடுக்கிறது, இவரோட லம்போகினி, மெர்சிடிஸ் பென்ஸ் மாதிரி காஸ்ட்லி கார்களோட கதவை ஓங்கியடிச்சி கழட்டி வீசுற கரடிக்கு பழக்கூடை கொடுக்கிறதுன்னு இவரோட ரீல்ஸெல்லாம் மில்லியன்ல வைரலாகிட்டிருக்கு. கூடவே, இவர்மேல தான் எக்கச்சக்க விமர்சனங்களும் போயிட்டிருக்கு.

ஆபத்தான விலங்குகளை வீட்ல வளர்க்கிறார். இவர் வளர்க்கிற சிங்கம், புலிகளோட பற்களை பிடுங்கி வெச்சிருக்கார். அதுங்களுக்கு போதை மருந்து கொடுத்து வெச்சிருக்கார். அதனால தான், அதுங்க அவரைக் கடிக்கலை. அதுங்களோட விரல் நகங்களையெல்லாம் வெட்டி வெச்சிருக்கார். அதனால தான் அதுங்க காலைத்தூக்கி போட்டாலும் அவர் மேல கீறல் விழலைன்னு நிறைய பேர் ஹமீதுவை வசைபாடிக்கிட்டு இருக்காங்க.

ஆனா, இவர் ஒரு வீடியோ இன்டர்வீயூவுல 2019-ல இருந்து நான் சொந்தமா, லைசென்ஸ் வாங்கி விலங்குகள் காப்பகம் நடத்திட்டு வர்றேன். அங்கே தான் சிங்கம், புலிகள் மட்டுமில்லாம சிம்பன்சி, சிறுத்தை, கரடி, ஒட்டகச்சிவிங்கி, கழுதைப்புலி, பயங்கரமான விஷமிருக்கிற மாம்பா பாம்புன்னு நிறைய விலங்குகளை வளர்த்துட்டு வர்றேன்.

அந்த காப்பகத்துலதான், நான் அதுங்களோட விளையாடுறேன். அதுங்களுக்கு போதை மருந்தெல்லாம் நான் கொடுக்கல. சிங்கம், புலிகளோட பல்லையும் பிடுங்கல. நகங்களையும் வெட்டல. நீங்களே பாருங்கன்னு சிங்கங்களோட வாயைத்திறந்துக் காட்டுறார். புலிகளோட பாதங்களைத்தூக்கி நகங்களைக் காட்டுறார். இவரோட விலங்குகள் காப்பகமும் அந்த நாட்ல ரொம்ப ஃபேமஸ். அங்க போறவங்க, குடும்பத்தோட சிங்கங்களோட ஃபோட்டோ எடுத்துக்கலாம். புலி கழுத்துல சங்கிலிக் கட்டி அதோட வாக்கிங் போகலாம்.

சிங்கத்துடன் பிரியாணி
சிங்கத்துடன் பிரியாணி

சட்ட விரோதமா இறக்குமதி செய்யப்பட்ட காட்டுயிர் செல்லப்பிராணிகளை யாராவது புறக்கணிச்சிட்டாலோ, மோசமா நடத்தினாலோ…

இந்த இடத்துல நாம ‘ஜாசிம் அலி’யோட கருத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கணும். ஆங்கில மீடியா ஒண்ணுத்துக்கு பேட்டிக்கொடுத்த அவர், ‘என்னோட செல்லப்பிராணியோட பேர் டெய்மூர். ஆனா, அவன் ஒரு நாய் கிடையாது. அவன் ஓர் ஆப்பிரிக்க சிங்கம். அவனை ஒரு பண்ணையில புறக்கணிக்கப்பட்ட செல்லப்பிராணியா கண்டெடுத்தேன்’ அப்படிங்கிற ஜாசிம் அலி, ஒரு வனவிலங்கு பூங்காவை நிர்வாகம் செஞ்சுட்டு வர்றார். சட்ட விரோதமா இறக்குமதி செய்யப்பட்ட காட்டுயிர் செல்லப்பிராணிகளை யாராவது புறக்கணிச்சிட்டாலோ, மோசமா நடத்தினாலோ அங்கிருந்து தத்தெடுத்து, தான் நிர்வாகம் பண்ற பூங்காவுக்குக் கொண்டு போய் வளர்க்கிறார். இந்தப் பூங்காவை நடத்துறதுக்கு அரசக்குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் தலேப் பின் சக்ர் அல் காசிம் உதவி செய்யுறதா சொல்றார்.

‘காட்டுயிர்களை தனியார் உடைமையாக்குறதுக்கு எதிரா ஐக்கிய அரபு அமீரகத்துல கடுமையான விதிமுறைகள் இருக்குன்னாலும், இந்த விலங்குகளை வெளிநாடுகள்ல இருந்து, குறிப்பா ஆப்பிரிக்காவுல இருந்து இறக்குமதி செஞ்சு வளர்க்கிறதா சொல்லப்படுது. வளைகுடா நாடுகள்ல இருக்கிற இளைஞர்கள், காட்டுயிர்களை செல்லப்பிராணிகளா வளர்க்கிறவங்க போடுற ரீல்ஸை பார்த்துட்டு தாங்களும் அப்படி வளர்க்க விருப்பப்படுறாங்க. சிங்கம், புலி, சிறுத்தைகளை செல்லப்பிராணிகளா வளர்க்கிறவங்க அதுங்க மேல ஏறி பயணம் பண்ண விரும்புறது, அதுங்களை வெச்சு நண்பர்களை பயமுறுத்துறதுன்னு ஆபத்தான விஷயங்களை செஞ்சுக்கிட்டிருக்காங்க.

கறுப்புச்சந்தையில ஒரு சிங்கத்தை வாங்கிட்டா, அது தனக்கு அடிமை. அதனால தன்னோட அந்தஸ்து உயர்ந்துட்டதாகவும், தான் ஒரு தைரியமானவன்னும் நினைச்சிக்கிறாங்க. ஆனா, அது காட்டு விலங்குகளோட உரிமை மீறல்’னு கொதிக்கிற ஜாசிம் அலியும், தன்னோட இன்ஸ்டா பக்கத்துல சிங்கத்தோட ஒரே தட்டில் சாப்பிடுற வீடியோ, ஒரு விருந்துல இவர் நண்பர்களோட ஒரு சிறுத்தையும் சேர்ந்து சாப்பிடுற வீடியோன்னு, காட்டுயிர்களோட பல வீடியோக்களை பகிர்ந்துட்டு வர்றார். இவரையும் ஒரு மில்லியன் பேர் ஃபாலோ பண்ணிட்டிருக்காங்க. இவரோட ரீல்ஸும் மில்லியன் கணக்கில் வியூஸ் வாங்கிக்கிட்டிருக்கு. இவரோட வனவிலங்கு பூங்காவுக்கு போறவங்களும் சிங்கம், புலியோட ரீல்ஸ் எடுத்துட்டுத்தான் இருக்காங்க.

Lion and Tiger insta Reels
Lion and Tiger insta Reels

இன்னொருத்தர் போன வருஷத்துல இருந்து தன்னோட யூடியூப்ல, நாய், பூனையில ஆரம்பிச்சு சிங்கம், புலி வரைக்கும் வளர்க்கிறதை ரீல்ஸா போட ஆரம்பிச்சிருக்கார். இவரும் கைவிடப்பட்ட விலங்குகளை காப்பாத்தி வளர்க்கிறதா சொல்லியிருக்கார். இவர், புலிக்குட்டிகள்ல ஆரம்பிச்சு வளர்ந்த சிங்கம் வரைக்கும், அதுங்க தன்னோட காரை நகத்தால கீறினாலோ, கையை லேசா கடிச்சாலோ, ஒண்ணோட ஒண்ணு சண்டை போட்டாலோ உடனே தன்னோட செருப்பை கழட்டி அதுங்களை அடிக்க ஆரம்பிக்கிறார். அவர் செருப்பைக் கழட்டினாலே சிங்கம், புலியெல்லாம் நாய்க்குட்டி மாதிரி பயத்துல பம்முது. இவரோட சேனலையும் ஒரு மில்லியன் பேருக்கும் மேல சப்ஸ்கிரைப் செஞ்சு வெச்சிருக்காங்க.

இதையெல்லாம் பார்க்கிறப்போ சர்க்கஸ்னு பேர் வைக்காம காப்பகம்கிற பேர்ல வீடியோ, ரீல்ஸ்னு போட்டு சம்பாதிட்டிருக்காங்களோ அப்படிங்கிற எண்ணம் வராமலும் இல்ல. அதே நேரம், அந்த பயங்கரமான காட்டுயிர்கள் தங்களை வளர்க்கிறவங்க கிட்டேயும், பராமரிக்கிறவங்க கிட்டேயும் அவ்ளோ பாசமா பழகுறதை பார்க்காம இருக்கவும் முடியலை. இந்த வீடியோக்களையெல்லாம் பார்க்கிறப்போ, இந்தக் காட்டுயிர்களுக்கு அதுங்களோட கனவிலாவது காடு வருமாங்கிறதுதான் நமக்குள்ள எழுகிற ஒரே வருத்தம்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.