போபால்: ம.பி.யின் தமோ மாவட்டத்தில் உள்ள மிஷன் மருத்துவமனையில் பிரிட்டனை சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணர் ஜான் கேமின் பெயரை தவறாகப் பயன்படுத்தி நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். இவர் பணியில் இருந்த 2 மாதங்களில் 70 நோயாளிகளை பரிசோதனை செய்துள்ளார்.
13 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 7 நோயாளிகள் உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12 முதல் யாதவ் தலைமறைவானார். விசாரணையில், உரிய மருத்துவத் தகுதிகளை பெறாமல் அவர் அறுவை சிகிச்சைகள் செய்துள்ளதாக தெரியவந்தது.
இந்நிலையில் உ.பி.யின் பிரயாக்ராஜில் விக்ரமாதித்ய யாதவை ம.பி. போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். போபாலில் உள்ள ஒரு ஏஜென்சி முலம் அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவருக்கு மாதம் ரூ.8 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.