சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, தான் பேசியதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாண்டு நினைவு நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட புகழஞ்சலி பதிவில் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
என்னுடன் நெருக்கமாக பழகி, என் மீது அன்பு செலுத்தியவர்கள் நான்கைந்து பேர் மட்டுமே. அதில் இயக்குநர் பாலச்சந்தர், தயாரிப்பாளர்கள் பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன், மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் ‘சோ’ ராமசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் எல்லாம் இப்போது இல்லை என்று நினைக்கும்போது வாடுகிறேன்.
‘பாட்ஷா’ படத்தின் 100-ம் நாள் விழாவில், தயாரிப்பாளராக ஆர்.எம்.வீரப்பன் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது நான் வெடிகுண்டு கலாச்சாரத்தைப் பற்றி பேசினேன்.
ஆளுங்கட்சியின் (அதிமுக) அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு அதைப்பற்றி நான் பேசியிருக்கக் கூடாது. அப்போது அந்தளவுக்கு எனக்கு தெளிவு இல்லை. அதனால் பேசிவிட்டேன். அதன்பிறகு, ‘அதெப்படி அமைச்சராக இருந்துகொண்டு, மேடையில் அரசுக்கு எதிராக ரஜினிகாந்த் பேசுவதை கேட்டுவிட்டு சும்மா இருந்தீர்கள்?’ என ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தூக்கிவிட்டார். இது என்னால்தான் நடந்தது என தெரிந்ததும், நான் ஆடிப்போய்விட்டேன். இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரவில்லை.
அதைத்தொடர்ந்து காலையில் ஆர்.எம்.வீரப்பனுக்கு போன் செய்து அவரிடம், “என்னை மன்னித்து விடுங்கள் சார், என்னால்தான் இப்படி ஆகிவிட்டது” என்று கூறினேன். அவர் எதுவுமே நடக்காத மாதிரி, “அதை விடுங்கள், அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் அதை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள். அடுத்து எங்கே படப்பிடிப்புக்கு செல்கிறீர்கள்?” என சர்வ சாதாரணமாகக் கேட்டார். தொடர்ந்து, “நான் வேண்டுமானால் ஜெயலலிதாவிடம் இதைப்பற்றி பேசட்டுமா?” எனக் கேட்டேன்.
அதற்கு அவர், “ஜெயலலிதா ஒரு முடிவு எடுத்தால் மாற்றமாட்டார். அவரிடம் பேசி உங்களது மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். அப்படி நீங்கள் சொல்லி, நான் அங்கே போய் சேரவேண்டிய அவசியம் இல்லை. விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்.
அந்தவகையில் அவர் ஒரு பெரிய மனிதர். ஆனால் எனக்கு அந்த தழும்பு எப்போதும் மறையவில்லை. ஏனென்றால் அந்த மேடையில் கடைசியாக பேசியது நான்தான். எனவே, எனக்குப் பிறகு, ஆர்.எம்.வீ. வந்து மீண்டும் மைக்கை பிடித்து எப்படி பேச முடியும்? மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுப்பதற்கு சில காரணங்கள் இருந்தாலும்கூட, இந்த காரணம் மிகவும் முக்கியமானது.
இவ்வாறு அதில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.