கடந்த ஏப்ரல் 2-ம் தேதி…
உலகமே அதிர்ந்த நாள் என்றே சொல்லலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் சொன்னதுபோல, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளை தவிர்த்து, அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தார்.
அதன்படி, இந்தியாவிற்கு 27 சதவிகித வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி ஏப்ரல் 9-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
விட்டுக்கொடுக்காத சீனா!
வரி விதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றைக் கண்டு பயந்து வியட்நாம் போன்ற நாடுகள் தாங்கள் அமெரிக்க பொருட்களின் மேல் விதிக்கும் வரியை ரத்து செய்வதாக அறிவித்தன.
மேலும், 75 நாடுகள் பரஸ்பர வரி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா இந்த வரி குறித்து வாயை திறக்கவே இல்லை.
சீனா மட்டும் அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றியது. சீனா அமெரிக்கா பொருட்கள் மீது 84 சதவிகித வரி விதித்தது. பேச்சுவார்த்தை, மிரட்டல் என ட்ரம்ப் எவ்வளவோ தூது விட்டும் சீனா கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை.
ட்ரம்ப்பின் அறிவிப்பு
இந்த வரியினால் இன்னொரு பக்கம், உலகளவில் பங்குச்சந்தை பெரும் சரிவை கண்டது. இதனால், உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று ட்ரம்ப், “பரஸ்பர வரிகளின் அமல் 90 நாள்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஆனால், இதற்கு சீனா மட்டும் விதிவிலக்கு. சீனாவிற்கு 125 சதவிகித வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று அறிவித்துள்ளார்.
இந்த 90 நாள்கள் அவகாசம் என்பது பிற நாடுகள் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த கொடுக்கப்பட்ட கெடு என்றே எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்து இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இதுவரை பரஸ்பர வரி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத இந்தியா, இந்த 90 நாள்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட உள்ளது இந்தியா. இருந்தும், பரஸ்பர வரி என்பது பிற நாடுகளுக்கு போல இந்தியாவிற்கும் சுமை தான். அதனால், இந்தியா பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால், இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.