ஆமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்ற 23-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் 3-வது ஓவரிலேயே ஜோப்ரா ஆர்ச்சரிடம் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மற்றொருபுறம் களமிறங்கிய ஜோஸ் பட்லர், ஷாருக்கான் இருவரும் சிறப்பாக விளையாடி தலா 36 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
அவர்களைத்தொடர்ந்து 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் 18.2-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. ராகுல் திவாட்டியா 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் மகீஷ் தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே இருவரும் தலா 2 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா இருவரும் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 6 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 1 ரன்னில் வெளியேறினார்.
அடுத்ததாக சஞ்சு சாம்சனுடன், ரியான் பராக் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் குவிக்கத் தொடங்கிய ரியான் பராக் 26 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து துருவ் ஜுரெல் 5 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வந்த சஞ்சு சாம்சன் 41 (28) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய சுபம் துபே 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக ஹெட்மயருடன், ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடி காட்டிய ஹெட்மயர் 29 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். பின்னர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ரன்னில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து ஹெட்மயரும் 52 (32) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய தேஷ் பாண்டே 3 ரன்னும், தீக்சனா 5 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் சந்தீப் சர்மா 6 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் மற்றும் ரஷித்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், , கெஜ்ரோலியா, சிராஜ் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. இதன்படி குஜராத் அணி 8 புள்ளிகளுடன் ஐ.பி.எல். தொடரின் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.