தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55). பட்டியலினத்தை சேர்ந்த இவர் விவசாய கூலி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ் (24) என நான்கு பிள்ளைகள். இந்த நிலையில், அதே தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் டாஸ்மாக் கடையில், மொத்தமாக மது வாங்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. குடிப்பழக்கம் உடைய அய்யாவிடம், ஆறுமுகம் மது கொடுத்து விற்க சொல்லியுள்ளார். இந்த நிலையில் தினேஷ், ஆறுமுகத்திடம் சென்று, எங்க அக்காவுக்கு திருமணம் நடக்கபோகுது. வரும் 12ம் தேதி நிச்ச்யதார்த்தம் இனி எங்க அப்பாவை மது விற்க சொல்லாதீர்கள் என கண்டித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆறுமுகம் போலீஸ்க்கு தகவல் கொடுத்ததாக சொல்கிறார்கள். இதையடுத்து 8ம் தேதி காலை தினேஷ் வீட்டுக்கு வந்த எஸ்.ஐ அறிவழகன், தினேஷை கைது செய்து அழைத்து சென்றுள்ளார். இதைதொடர்ந்து தினேஷின் சகோதரிகள் மற்றும் உறவினர்கள் நடுக்காவேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் முறையிட்டுள்ளனர். எங்க அக்காவுக்கு 12ம் தேதி நிச்சயத்தார்த்தம் நடக்க போகுது, இப்பகூட எங்க மாமா இறந்து விட்டார். அதுக்கு நாங்க கிளம்பி கொண்டிருந்த போது தினேஷை கைது செய்து விட்டனர்.
எந்த தப்பும் செய்யாத அவனை ஏன் கைது செய்தீர்கள் என்று அக்கா கீர்த்திகா, சர்மிளாவிடம் கேட்டுள்ளார். தினேஷ் ஆயுதம் வைத்து கொண்டு நின்றான் அதற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறோம் என்றுள்ளார். எங்க வாழ்க்கையே உங்க கையில் இருக்கு. பொய் வழக்கு போடாதீங்க மேடம் என கீர்த்திகா கெஞ்சிய நிலையில், சர்மிளா சாதியை சொல்லி திட்டியதாகச் சொல்கிறார்கள். இதில் மனம் உடைந்த மேனகா மற்றும் கீர்த்திகா போலீஸ் ஸ்டேஷனிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் சிகிச்சையில் இருந்த கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவரது உறவினர்கள், கீர்த்திகாவின் சாவுக்கு இன்ஸ்பெக்டர் தான் காரணம் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி ராஜாராமிடம் கோரிக்கை வைத்தனர். உயிரிழந்த கீர்த்திகா பி.டெக் பட்டதாரி. அரசு வேலை பெறுவதற்காக இரண்டு முறை தேர்வு எழுதியிருக்கிறார். தொடர்ந்து அதற்கான முயற்சியில் இருந்தார். அரசு அதிகாரி ஆக வேண்டும் என்பது தான் அவருடைய லட்சியமாக இருந்தது. இப்படியான சூழலில் பொய் வழக்கில் தம்பியை போலீஸ் கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் விஷம் குடித்தவர் இறந்து விட்டார்.
கல்யாண வீடாக மாற வேண்டிய வீட்டில் காரியம் செய்ய வைத்து விட்டதாக கீர்த்திகா உறவினர்கள் அழுது புலம்பினர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசு பொருளாக மாறியது. இன்று கீர்த்திகாவின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் நடுக்காவேரி காவல் நிலையத்திலும் போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தினேஷ், இன்று ஒரு நாள் மட்டும் ஜாமீனில் வந்துள்ளார். இரவு 7 மணிக்குள் மீண்டும் அவர் சிறைக்குள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சர்மிளா, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஆர்.டீ.ஓ தலைமையில் விசாரணை நடத்தவும் எஸ்.பி ராஜராம் உத்தரவிட்டுள்ளார்.