Virat Kohli interview ; ஐபிஎல் 2025 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு நட்சத்திர பிளேயர் விராட் கோலி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான கருத்துகளையும் சம்பங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக நெருங்கிய நண்பரான இஷாந்த் சர்மா வீசிய பந்துகளை மிகுந்த பயந்தோடு அவர் எதிர்கொண்ட அந்த நாளை பற்றியும் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.
விராட் கோலி பேசியிருக்கும் அந்த பேட்டியில், ” நானும் இஷாந்த் சர்மாவும் கிரிக்கெட் ஒன்றாக விளையாடியவர்கள். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள் என்றுகூட சொல்லலாம். ஆனால் அது பலருக்கும் தெரியாத ஒன்று. உண்மையில் நான் அவருடைய பந்துகளை நிறைய எதிர்கொண்டிருக்கிறேன். வலைப்பயிற்சியன்போது எந்தவித பயமும் இல்லாமல் அடித்து ஆடியிருக்கிறேன். ஆனால், ஐபிஎல் தொடங்கி நடைபெற்ற முதல் போட்டியில் நான் அவரை எதிர்கொண்ட அன்றைய நாள் எனக்கு உண்மையிலேயே பயமாக இருந்தது. அவருடைய பந்தையா? எதிர்கொள்கிறேன் என்ற கேள்வி எனக்கு மிகப்பெரிய அளவில் இருந்தது.
ஆம், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய வருஷம். இஷாந்த் சர்மா அப்போது தான் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்து திரும்பியிருந்தார். அவரை பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தார். மிக நீளமான முடி, வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மற்றும் கலரிங் செய்திருந்தார். அதுவரை நான் அவரை அப்படி பார்க்கவில்லை. சின்னசாமி ஸ்டேடியத்தில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸூக்கும் முதல் போட்டி நடக்கிறது. அப்போட்டியில் மெக்கலம் 158 ரன்கள் விளாச, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்ததிருந்தது.
நாங்கள் சேஸிங் இறங்கினோம். கேப்டன் டிராவிட் சீக்கிரம் அவுட்டாகிவிட்டார். 3வது விக்கெட்டுக்கு நான் இறங்கினேன். ஆனால், அந்த மைதானத்தில் இறங்குவது எனக்கு ஒரு பெரிய பிரம்மிப்பாக இருந்தது. ஏனென்றால் நான் அவ்வளவு கூட்டத்தை பார்த்தது இல்லை. அப்போது தான் வெளிப்புற அழுத்தம் என்றால் என்ன என்பதை எதிர்கொண்ட முதல் போட்டி. பேட்டிங் நின்றால் என்னால் சரியாக ஆட முடியவில்லை. கொல்கத்தா பிளேயராக இருந்த இஷாந்த் அன்னைக்கு வீசிய பந்துகள் எல்லாம் வேற ரகமாக இருந்தது. அவருடைய பந்துகளை எதிர்கொள்ளவே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. இந்த பக்கம் வா… என இஷாந்த் ஸ்லெட்ஜிங் வேற செய்தார். நானும் சீக்கிரம் விக்கெட்டை இழந்தேன். இஷாந்த் செய்தது காமெடி தான். இருந்தாலும் அன்னைக்கு அவர் வேற மாதிரி இருந்தார்” என விராட்கோலி சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.