நீட் விலக்கு போராட்டம்:
ஈரோட்டில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீட் தேர்வு விலக்கு போன்ற எந்த பிரச்னைக்காக திமுக போராடினாலும், ஊழலை மறைக்கதான் இதைச் செய்கிறோம் என பாஜக கூறுகிறது.

ஒவ்வொரு முறையும் நீட் விலக்கை வலியுறுத்துகிறோம். இதை அரசியல் என்று சொன்னால் என்ன செய்வது? மத்திய அரசுக்கு எதிராக போராடாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்க முடியுமா?
மக்கள் விரோத மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து போராடத்தான் செய்வோம். நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக நின்று செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.
ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு:
2026 தேர்தலில் திமுகதான் ஆட்சிக்கு வரும் என பொதுமக்கள் சொல்கிறார்கள். 200 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதில் மாறுப்பட்ட கருத்து இல்லை.

ஆளுநர் தொடர்பான வழக்கில் தமிழக அரசு எந்தெந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சீர்தூக்கிப் பார்த்து நியாயமான வரலாற்றுத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. இது தமிழக அரசின் சிறந்த செயல்பாட்டுக்கு கிடைத்த சான்றிதழ்” என்றார்.