டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்தில் மாகாண கவர்னர் மரணம்: பலி எண்ணிக்கை 113 ஆனது

சாண்டோ டொமிங்கோ:

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ‘ஜெட் செட்’ என்னும் விடுதி அமைந்திருந்தது. இந்த விடுதிக்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.

நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். அரசியல் பிரமுகர்கள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நேற்று அதிகாலையில் இசை கச்சேரியில் பொதுமக்கள் திளைத்து கொண்டிருந்த வேளையில் திடீரென விடுதி மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். நேற்று காலை நிலவரப்படி 66 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நேற்று மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களிலும் சிலர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 160 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்தவர்களில் மாண்டே கிறிஸ்டி மாகாண கவர்னர் நெல்சி குரூஸ், முன்னாள் மேஜர் லீக் பேஸ்பால் வீரருமான ஆக்டேவியோ டோட்டல் (வயது 51) ஆகியோரும் அடங்குவர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட டோட்டல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.