மதுபான ஆலை நிறுவனத்திடம் இருந்து அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தில் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் செயல்படுவது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கம், மதுரவாயல் பகுதியில் மோகன் மதுபான ஆலை நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 248 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கடந்த 1975-ம் ஆண்டு கையகப்படுத்தி உத்தரவிட்டது. இந்த நிலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிய ராமாபுரம் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து, மதுபான ஆலை நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. ‘கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படில எங்கள் நிலத்தை அரசு கையகப்படுத்தியது தவறு’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், உயர் நீதிமன்றத்தில் மதுபான ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘புதிய ராமாபுரம் திட்டம் கைவிடப்பட்டதால், தற்போது வரை அந்த நிலம் மனுதாரர் நிறுவனத்தின் வசம்தான் உள்ளது. எனவே, நிலத்தை திரும்ப பெற மனுதாரருக்கு முழு உரிமையும் உள்ளது’’ என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.ரமன்லால், ‘‘மதுபான ஆலைக்கு சொந்தமான நிலத்தை கடந்த 1975-ம் ஆண்டே தமிழக அரசு சட்டரீதியாக கையகப்படுத்தி, வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்து விட்டது. அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. நிலத்துக்கான இழப்பீடும் சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தில் கடந்த 1986-ம் ஆண்டு டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது.

முறைகேடாக ஆக்கிரமிப்பு: ஆனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை மனுதாரர் நிறுவனம் முறைகேடாக ஆக்கிரமித்துக்கொண்டு தற்போதும் தனது வசம் வைத்துள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன், நிலத்தை காலி செய்து கொடுக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.

வழக்கு தள்ளுபடி: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘அரசு கையகப்படுத்திய நிலத்தில் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் செயல்படுவது சட்டவிரோதம். அந்த நிலத்தை மனுதாரர் நிறுவனத்திடம் இருந்து மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த 248 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவி்ட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.