பயணிகள் ஹெலிகாப்டர் நதியில் மூழ்கி விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

நியூயார்க்,

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் (Hudson River) விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக நியூயார்க் நகர மேயர் தெரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இறந்தவர்களில் ஸ்பெயினிலிருந்து வருகை தந்த ஒரு விமானி மற்றும் ஒரு குடும்பத்தினர் அடங்குவர். நியூயார்க் தீயணைப்புத் துறை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:17 மணிக்கு நதியில் ஹெலிகாப்டர் மூழ்கியதாக தகவல் பெற்றதை அடுத்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.

நியூ ஜெர்சி மாநில போலீசார் அளித்த தகவலின்படி, பெல் 206L-4 லாங்ரேஞ்சர் IV ரகத்தைச் சேர்ந்த N216MH பதிவு எண் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி உள்பட 6 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாகும் முன் சுமார் 15 நிமிடங்கள் பறந்ததாக விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.

இதற்கிடையில், நியூயார்க் நகர காவல் துறை (NYPD) விபத்தைத் தொடர்ந்து ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது, அதன்படி வெஸ்ட் சைட் நெடுஞ்சாலை மற்றும் ஸ்பிரிங் தெரு அருகே ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால், சுற்றியுள்ள பகுதிகளில் அவசர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.