பாட்னா,
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 74 வயதான நிதிஷ் குமார் வருகிற தேர்தலிலும் போட்டியிட்டு மீண்டும் முதல்-மந்திரியாக விரும்புகிறார். இதற்காக தீவிர தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டு உள்ளார்.ஆனால் நிதிஷ் குமாருக்கு தேசிய அளவில் பதவி அளிக்க வேண்டும் என பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஸ்வினி குமார் சவுபே கூறியுள்ளார். பீகாரை சேர்ந்த அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் குமாரின் பங்களிப்பு மகத்தானது. இந்த கூட்டணிக்கு நங்கூரம் போல செயல்பட்டு பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி வருகிறார்.
அவரை துணை பிரதமராக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்’ என தெரிவித்தார். இந்த விருப்பம் நிறைவேறினால், பாபு ஜெகஜீவராமுக்குப்பிறகு அந்த பெரிய பதவியை வகிக்கும்பீகாரின் 2-வது மகனாக நிதிஷ் குமார் இருப்பார் என்றும் அவர் கூறினார். முன்னதாக, நிதிஷ் குமாரின் தலைமையில் தேர்தலை சந்திக்க பாஜகவினர் விரும்பவில்லை எனவும், பாஜக தலைமையில்தான் மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என அந்த கட்சி தலைவர்கள் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனவே நிதிஷ் குமாரை மரியாதையுடன் வழியனுப்ப பாஜக விரும்புவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.இந்த பின்னணியில் அஸ்வினி குமார் சவுபேயின் கருத்து வெளியாகி உள்ளது.
அதேநேரம் இந்த கருத்தை ஐக்கிய ஜனதாதளம் நிராகரித்து உள்ளது.இது குறித்து கட்சியின் எம்.எல்.சி.யும், செய்தி தொடர்பாளருமான நீரஜ் குமார் கூறும்போது, ‘நிதிஷ் குமார் தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம். தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சிகளும் தங்கள் முதல்-மந்திரியாக நிதிஷ் குமாரை அங்கீகரித்து உள்ளன என்று அமித்ஷாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்’ என தெரிவித்தார்.