வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு

டாக்கா,

வங்காளதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு கோர்ட்டில் மேலும் ஒரு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனால் நாட்டை விட்டு ரகசியமாக வெளியேறிய ஷேக் ஹசீனாவுக்கு, இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. அவரை தங்கள் நாட்டுக்கு நாடு கடத்துமாறு வங்காளதேச இடைக்கால அரசு இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா மீது வங்காளதேச கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. குறிப்பாக கூட்டுக்கொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவருக்கு எதிராக கைது வாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான புர்பாச்சலில் வீட்டு மனை ஒன்றை மோசடியாக வாங்கியது தொடர்பாக ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக டாக்கா பெருநகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் அரசு அதிகாரிகள் ஆவர்.

இந்த ஊழல் தொடர்பாக அந்த நாட்டின் ஊழல் தடுப்பு கமிஷன் விசாரித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஷேக் ஹசீனாவின் மகளான சைமா, புதிய நகர வீட்டுவசதி திட்டத்தில் சட்ட விதிகளை மீறி வீட்டு மனையை பெற்றதாகவும் இதற்கு ஷேக் ஹசீனா தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதால் அவர்களுக்கு எதிராக நேற்று பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தாக்கல் செய்யுமாறு ஊழல் தடுப்பு கமிஷனுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.