சென்னை: உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும் இதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக புதன்கிழமை (ஏப்.9) அன்று ட்ரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து சுமார் 1.5 மில்லியன் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொபைல் போன், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அந்த நிறுவனத்தின் சாதனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளாக சீனா, இந்தியா உள்ளன. சீனாவுக்கு பரஸ்பர வரி விதிப்பை நிறுத்த முடியாது என ட்ரம்ப் கூறியுள்ளார். இரண்டு தரப்பும் வரிகளை அன்றாடம் கூட்டி வருகின்றன. கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வரி விதிப்பு யுத்தம் மூண்டுள்ளது.
இந்த நிலையில்தான் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் சாதனங்களை அமெரிக்கா கொண்டு செல்வதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டி உள்ளது. அந்த நிறுவனத்தின் விற்பனை சந்தையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவில் ஆப்பிள் சாதனங்களின் விலை கூடும். அதனால் அதை தவிர்க்க விரைவு கதியில் ஆப்பிள் இந்த ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளது. இது குறித்து உலக செய்திகளை வழங்கும் முன்னணி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
வரியை தவிர்க்கும் விதமாக சென்னையில் இருந்து ஆறு மணி நேரத்தில் சுங்க நடவடிக்கைகளை விமான நிலையத்தில் முடித்து, சரக்கு விமானம் மூலம் அமெரிக்காவுக்கு ஆப்பிள் சாதனங்களை கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிரத்யேக ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து ஆப்பிள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் 100 டன் வரை சுமந்து செல்லும் ஆறு சரக்கு விமானங்கள் இந்தியாவில் இருந்து சென்றுள்ளது. இதை இந்திய அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனராம்.
ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் அதன் கேபிளின் மொத்த எடை 350 கிராம். 600 டன் என்றால் சுமார் 1.5 மில்லியன் (15 லட்சம்) சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் கொண்டு சென்றுள்ளது என தெரிகிறது. ஆண்டுதோறும் சுமார் 220 மில்லியன் ஐபோன்களை ஆப்பிள் உலக அளவில் விற்பனை செய்கிறது. இதில் அமெரிக்காவில் விற்பனையாகும் போன்கள் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
வரி விதிப்பை கருத்தில் கொண்டு வழக்கமான உற்பத்தியில் சுமார் 20 சதவிதம் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட இந்திய ஊழியர்கள் பணி செய்வதாகவும் தெரிகிறது. பொதுவாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை விடுப்பு நாளாகும். ஆனால், இப்போது அங்கும் பணி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா மூலம் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்திய அரசு வழங்கும் சலுகை, சீனாவில் நிலவும் கெடுபிடி போன்றவை இதற்கு காரணம்.
சென்னையில் உள்ள ஆப்பிள் சாதன உற்பத்தி கூடத்தில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 20 மில்லியன் (2 கோடி) ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 அடங்கும்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஃபாக்ஸ்கான் தரப்பில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆப்பிள் சாதனங்களின் மதிப்பு கடந்த ஜனவரி மாதம் 770 மில்லியன் டாலர்கள். பிப்ரவரியில் 643 மில்லியன் டாலர்களாக இது இருந்துள்ளது. அதற்கு முந்தைய நான்கு மாதங்களில் 110 மில்லியன் முதல் 331 மில்லியன் டாலர் என ஏற்றுமதியான சாதனங்களின் மதிப்பு இருந்துள்ளது. அமெரிக்காவில் சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் இந்த சாதனங்கள் இறக்குமதி ஆகியுள்ளன.