‘நம்ம கோவை’ செயலி அறிமுகம் – முக்கிய அம்சங்களை விவரித்த மாநகராட்சி

கோவை: பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ‘நம்ம கோவை’ செயலியை, மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் ஆன்லைன் முறையில் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ‘நம்ம கோவை’ என்ற செயலி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இச்செயலியின் பயன்பாடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: “பொதுமக்கள் தங்களது செல்போன்களில் உள்ள ப்ளே ஸ்டோர் தளம் வாயிலாக ‘நம்ம கோவை’ என ஆங்கிலத்தில் டைப் செய்து, இச்செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்தவுடன், நமது செல்போன் எண், பாஸ்வேர்ட் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை இச்செயலியை பயன்படுத்தலாம். மாநகராட்சியின் இணையதளத்தை லேப்டாப் மூலம் நாம் பயன்படுத்துவதை போல் இச்செயலி வாயிலாக பயன்படுத்தலாம்.

கோவையின் முக்கிய சுற்றுலா தளங்கள் குறித்த விவரங்கள், கோவை மாநகரின் சுய விவரங்கள், தன்னார்வலர்கள் பதிவு செய்த விவரம், பொதுப்பணிகள் மற்றும் அம்சங்கள், அரசுத் திட்டங்கள், மாநகராட்சி அலுவலர்களின் தொடர்பு விவரங்கள், வார்டுகளின் விவரங்கள், அதன் வரைபடங்கள், மாநகராட்சியின் செய்திகள், நிகழ்வுகள், அதிகாரிகளின் ஆய்வு நிகழ்வுகள் போன்றவை அதில் இருக்கும். மேலும், மாநகராட்சியின் திருமண மண்டப விவரங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

சொத்து வரி செலுத்துதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பித்தல், கட்டிட அனுமதி எண் பெற விண்ணப்பித்தல், மாநகராட்சி திருமண மண்டபங்கள் முன்பதிவு செய்து கொள்ளும் முறைகள், வரிவசூல் மையங்கள் எங்கெங்கு உள்ளன என்பன போன்ற அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளன.இச்செயலி மூலம் நகர மக்களுக்கு தேவையான தகவல்கள், சேவைகள் அனைத்தும், ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி நகர நிர்வாகத்துடன் பொதுமக்கள் இடையே இணைப்பு பாலமாக செயல்பட்டு, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.