வாராணசி மாவட்ட ஆட்சியரும் தென்காசியின் கடையநல்லூர் தமிழருமான ராஜலிங்கம் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறியதாவது: ‘வாராணசியின் வளர்ச்சிக்காக, நாட்டின் பல்வேறு முக்கிய பொதுநல அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இடப்பட்டு பல திட்டங்கள் செயலாகின்றன. இந்த பட்டியலில் ஒன்றாக இம்மாவட்டத்தில் 356 கிராமப்புற நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கிராமவாசிகள் படிக்கும் வகையில் நூல்களும், பயிற்சிபெறும் வகையில் இணையவசதிகளுடன் கூடியக் கணினிகளும் இடம்பெற்றுள்ளன.
கிராம நூலகங்கள் அமைக்க, கொல்கத்தாவின் ராஜாராம் மோஹன்ராய் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகங்களின் மதிப்பு ரூ.7.12 கோடி ஆகும். வாராணசியின் நூலகங்கள் பெறும் பலனை பொறுத்து இந்த திட்டம் உபி முழுவதிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 2023-ல் வாராணசியில் கிராமப்புறங்களின் 257 பள்ளிகளில் இலவச ஆங்கில ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்டன. இது, சென்னை ஐஐடியின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை மற்றும் தமிழகத்தின் ஓபன்மென்டர் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இது தற்போது உபி முழுவதும் அமலாகி, வட இந்தியா உள்ளிட்ட இதர மாநிலங்களில் ‘வித்யா சக்தி’ எனும் பெயரில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.