திருப்பூர்: அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என, திருப்பூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விமர்சித்தார்.
தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டில் அரசு அச்சகங்கள் இயங்குகின்றன. திருப்பூர் பல்லடம் சாலையில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் மண்டப வளாக பகுதியில் புதிய அரசு அச்சகக் கிளையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (ஏப். 11) மாலை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் 7 கிளையாக திருப்பூரில் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு அச்சுப்பணி துவங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசின் பணிகள், உள்ளாட்சி பணிகள் மற்றும் மருத்துவத்துறைகள் சார்ந்த பணிகள் அச்சுப்பணிகள் செய்யப்பட உள்ளது. சென்னையில் 1831-ம் ஆண்டு அரசின் சார்பில் 10 பணியாளர்களை கொண்டு செயல்படத் துவங்கியது. ஏறத்தாழ 193 ஆண்டு காலம் வரலாறு கொண்டது. மைய அச்சகம் சென்னையிலும், மதுரை, சேலம், புதுக்கோட்டை, விருதாச்சலம் மற்றும் திருச்சி என 5 இடங்களில் கிளைகள் உள்ளன. தற்போது திருப்பூரில் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த அரசின் அச்சுப்பணிகள் திருப்பூரில் நடைபெறும். அரசின் கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வதற்கான அனுமதியை இனி திருப்பூரில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பிறகு வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் மே மாதத்தில் இருந்து விரைவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக- பாஜக கூட்டணியால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடந்தமுறையும் தேர்தலில் ஒன்றாக சந்தித்தவர்கள் தான். அதிமுக- பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.
கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விசைத்தறியாளர்கள் போராட்டம் அறிவித்தனர். திருப்பூர் உண்ணாவிரத போராட்டம் பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது. தற்போது கோவை மாவட்டம் சோமனூரில் போராட்டம் நடைபெறுகிறது. தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. விரைவில், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பேசி சுமூகமான முடிவு எட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.