தமிழக பாஜக புதிய தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்: அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு மாற்றப்படுகிறார்

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் இதுவரை தலைவராக இருந்த அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு மாற்றப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். தமிழக பாஜகவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கின. இதைத்தொடர்ந்து உட்கட்சி தேர்தல் பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கின.

மாநில தேர்தல் அதிகாரியாக பாஜக மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தியும், இணை அதிகாரிகளாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.செல்வகுமார், மாநிலச் செயலாளர் மீனாட்சி, மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.

கிளை தலைவர், மண்டல் தலைவர், மாவட்ட தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகளை தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்தனர். மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த இரு பதவிகளுக்கு போட்டியிடுவோர் ஏப்.11-ம் தேதி (நேற்று), மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கமலாலயம் வந்தார். அப்போது அவர் வாசலை தொட்டு வணங்கி உள்ளே நுழைந்தார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். தொடர்ந்து, அங்கு நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதில் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், கே.பி.ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், கோவை முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக ஒருமனதானக போட்டியின்றி தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட தனது விருப்பமனுவை வழங்கினார். அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட 10 முக்கிய தலைவர்கள் அவரது விருப்ப மனுவை முன்மொழிந்தனர். இந்த விருப்பமனுவை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி, இணை அதிகாரி மீனாட்சி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

அப்போது, திடீரென பாஜக நிர்வாகி ஒருவர் விருப்ப மனுவை வழங்க வந்தார். இதைப்பார்த்த எல்.முருகன், கருப்பு முருகானந்தம், வானதி உள்ளிட்ட தலைவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கட்சி நிர்வாகிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு நிர்வாகிகள் விருப்பமனுக்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு அளித்திருந்ததால் அவர் தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழக பாஜக தலைவர் பதவிக்கான விருப்பமனு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளது. அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளை பல செய்துள்ளார். பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் சரி, மத்திய அரசின் திட்டங்களை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதிலும் சரி, அண்ணாமலையின் பங்கு அளப்பரியது. அண்ணாமலையின் திறன்களை கட்சியின் தேசிய கட்டமைப்பில் பாஜக பயன்படுத்தும்’ என குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராகவும், அண்ணாமலை தேசிய பொறுப்புக்கும் மாற்றப்படுவது உறுதியாகி உள்ளது. தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று (12-ம் தேதி) மாலை 4 மணிக்கு வானகரம் தனியார் அரங்கில் நடைபெற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.