சென்னை: தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா நடைபெறும் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அம்பேத்கர் பிறந்தநாள் வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் 11 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
பி்ன்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, ஏப்ரல் 13-ம் தேதி (நாளை) காலை அம்பேத்கர் சிலைகளை தூய்மைப்படுத்த உள்ளோம். அன்று மாலை அவரது சிலைக்கு அருகில் தீபம் ஏற்றப்படும். 14-ம் தேதி ஜெயந்தி நாளன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும். கிளை அளவில் அவரது படத்துக்கு நிர்வாகிகள் மரியாதை செலுத்துவார்கள்.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கான மத்திய அரசின் நலத்திட்ட உதவி முகாம் நடைபெறும். பாஜக சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
ஏப்.15 முதல் 25-ம் தேதிக்குள் மாவட்ட அளவில் அரங்க கூட்டம், கண்காட்சி நடத்தப்படும். இந்த அரங்க கூட்டங்களை பட்டியலினத்தை சேர்ந்த பெண்கள் தொடங்கி வைப்பார்கள். அம்பேத்கரை காங்கிரஸ் எவ்வாறு இழிவுபடுத்தியது என்பதை இதில் எடுத்துரைப்போம். இவ்வாறு தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்பேத்கர் ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.