''பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அரசு மக்களை சுரண்டுகிறது'' – காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை உயர்த்தியதன் மூலம் அரசு பொதுமக்களைக் கொள்ளையடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை விமர்சித்துள்ளது. மேலும், அரசு கொள்கைகள் எவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு பயனளித்தன என்று மத்திய தணிக்கைக் குழு (சிஏஜி) ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும், இதில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டதா, கூட்டுச்சதி ஏதும் உள்ளதா என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மத்திய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் சுரண்டப்படுகிறார்கள். ஒருபுறம் மோடி அரசு வரிச்சுமையை அதிகரித்து மக்களைச் சுரண்டுகிறது என்றால் மறுபுறம், அரசும் எண்ணெய் நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. இது வெளிப்படையான ஒரு பொருளாதாரச் சுரண்டல்.

சில உண்மைகள் இங்கே: கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.9.20 ஆகவும், டீசலுக்கு ரூ.3.46 ஆகவும் இருந்தது. அது தற்போதைய மோடி அரசில் பெட்ரோலுக்கு ரூ.19.90 ஆகவும், டீசலுக்கு ரூ.15.80 ஆகவும் இருக்கிறது. இது முறையே 357 சதவீதம் மற்றும் 54 சதவீதம் அதிகம்.

கடந்த 11 ஆண்டுகளில் பெட்ரோலியத்துறையின் மூலம் அரசு ரூ.39.54 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு கச்சா எண்ணெயின் விலை பேரல் 108 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 65.31 அமெரிக்க டாலராக உள்ளது. அதாவது 40 சதவீதம் மலிவு இது. ஆனால், பெட்ரோல் டீசல் விலை யுபிஏ அரசை விட மோடி அரசில் அதிகமாக உள்ளது.

யார் பயனடைகிறார்கள்?: அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் மூலமாக கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. ஆனால் பொதுமக்களோ பெட்ரோல் டீசல் விலை உயர்வால் கொள்ளையடிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது.

அரசின் கொள்கைகள் இந்தத் தனியார் நிறுவனங்ளுக்கு எவ்வாறு பயனளித்தன என்பதை சிஏஜி தணிக்கைச் செய்யவேண்டும். இதில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டதா, கூட்டுச்சதி உள்ளதா என்று சிவிசி மற்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

பொதுமக்கள் பணத்திற்கு கணக்கு காட்டப்பட வேண்டும், அரசின் பொறுப்புகூறல் நிலைநிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நீண்ட இந்திப்பதிவுடன், எண்ணெய் நிறுவனங்கள் பெற்ற லாபங்கள் குறித்த ஊடக செய்தி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.