தோனி, ஜடேஜா, அஸ்வின் – 3 பேரும் இருப்பது சிஎஸ்கேவுக்கு நல்லதா? கெட்டதா?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஐபிஎல் தொடர்களில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அதிலும் 10 முறை இறுதிச்சுற்றுக்கும் சென்றிருக்கிறது. 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறது.

Chennai Super Kings: மோசமாக விளையாடும் சிஎஸ்கே 

2020, 2022, 2024 ஆகிய மூன்று தொடர்களில் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதிபெறவில்லை. மேலும், இதுவரை சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தை பிடித்ததும் இல்லை. அந்தளவிற்கு வலுவான அணியாக திகழும் சிஎஸ்கே அணி, நடப்பு தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

Chennai Super Kings: தரைமட்டத்தில் சிஎஸ்கே

6 போட்டிகளில் விளையாடி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் சிஎஸ்கே தோற்றுவிட்டது. இதுபோல் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோற்றதே இல்லை. மேலும், சேப்பாக்கத்திலும் தொடர்ச்சியாக 3 போட்டிகளை தோற்றுள்ளது. இப்படி பல சீசன்களாக கட்டிக்காத்து வந்த கோட்டையை ஒரே சீசனில் தரைமட்டத்திற்கு கொண்டுவந்துவிட்டது, தற்போதைய சிஎஸ்கே அணி.

Chennai Super Kings: தோனி, ஜடேஜா, அஸ்வின் – வேண்டாமா?

இதற்கு தொடர் தோல்வி காரணமில்லை, மிகவும் சுமாரான ஆட்டமே ரசிகர்களை கவலைக்கொள்ளச் செய்கிறது. போராடி தோற்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வெற்றிக்கு முயற்சியே எடுக்கவில்லை என்பதுதான் பெரும்பாலோனோரின் ஆதங்கமாக இருக்கிறது. இந்த ஆதங்கத்தில் பலரும் கூறும் விஷயம் என்னவென்றால் தோனி, ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களை தூக்கிவிட்டு இளம் இரத்தத்தை அணிக்குள் பாய்ச்ச வேண்டும் என்கிறார்கள்.

Chennai Super Kings: சிஎஸ்கேவில் இளைஞர்கள் தேவை

இளைஞர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கதுதான். அனைத்து அணிகளும் திறமையான இளைஞர் பட்டாளத்தையே வைத்திருக்கும்போது சிஎஸ்கே மட்டும் இளைஞர்களை நம்பாமல் இருப்பது சரியானது இல்லைதான். ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஆன்ட்ரே சித்தார்த் போன்ற இளம் பேட்டர்களுக்கு நிச்சயம் இந்த சீசனிலேயே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Super Kings: ஜடேஜா, அஸ்வின் ஏன் தேவை?

ஆனால், தோனி – ஜடேஜா – அஸ்வினை வெளியேற்றிவிட்டாலே சிஎஸ்கே அணி பலமாகிவிடும் என கூறுவது தவறாகும். தோனியும் ஜடேஜாவும் பின்வரிசை பேட்டர்கள். டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் தொடர்ந்து சொதப்பி வருவதே இவர்கள் மீது கடும் அழுத்தத்தை உண்டாக்குகிறது. 

ஜடேஜா தற்போது சற்று நம்பிக்கையற்று இருக்கிறார். நிலைமை சற்று சீரானதும் அவரின் ஆட்டம் தனித்து தெரியும் அளவிற்கு மிளிரும் எனலாம். அஸ்வினை வெறும் கடந்த 6 போட்டிகளை மட்டும் வைத்துக்கொண்டு புறந்தள்ளுவது நல்லதல்ல. அவரின் அனுபவமும், நுண்ணறிவும் அணிக்கு நிச்சயம் தேவை எனலாம்.

Chennai Super Kings: தோனி இருப்பது தவறா?

தோனிதான் காம்பினேஷனை கெடுகிறார், அணி வளரவிடாமல் தடுக்கிறார், மற்றவர்கள் கேப்டன்ஸியை பிடுங்குகிறார் என பொத்தம்பொதுவாக சிலர் வாதிடுகின்றனர். இது அவர் பார்த்து வளர்த்த அணி என்பதால் தோனிக்கு கூடுதல் ஆர்வம் இருக்கும், எனவே அவர் ஓய்வுபெற்று செல்லும்போது நல்ல கைகளில் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும என்று கூட அவர் நினைக்கலாம். அதை யாராலும் தவறு என சொல்ல இயலாது. 

ருதுராஜ் அடுத்த சீசன் வந்ததும் கேப்டன்ஸியை பெறுவாரா, தோனியே தொடர்வாரா, மினி ஏலத்தில் வேறு வீரர்களை எடுத்து கேப்டனாக்குவார்களா என்பதையெல்லாம் வருங்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம். தற்சமயம் சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா, அஸ்வினின் பங்களிப்பு மிக மிக அவசியமானது ஆகும்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.