''வக்பு-களில் இந்துக்கள் உறுப்பினராவது பிரச்சினையாக இருக்காது'' – பாஜக எம்.பி குலாம் அலி கருத்து

புதுடெல்லி: வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருப்பது பிரச்சினையாக இருக்காது என ஒரு கருத்து எழுந்துள்ளது. இதை, ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜகவின் ஒரே முஸ்லிம் எம்பியான குலாம் அலி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு ‘வக்பு வாரியச் சட்டம் 2025’ஐ நிறைவேற்றியது. இதற்கு துவக்கம் முதலாகவே முஸ்லிம்கள் நாடு முழுவதிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதிர்கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றார். இதன் காரணமாக, வக்பு சட்டத்தின் நன்மைகளை முஸ்லிம்களிடம் எடுத்துரைக்க பாஜக, தேசிய அளவில் பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி குலாம் அலி, வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். புதிய சட்டத்தின்படி, வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர் உறுப்பினராவது பிரச்சினையாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மாநிலங்களவையால் பரிந்துரைக்கப்பட்ட பாஜகவின் ஒரே எம்.பியான குலாம் அலி கூறியிருப்பதாவது: ‘வக்பு சொத்துக்கள் எந்த நோக்கத்திற்காக நன்கொடையாக வழங்கப்பட்டனவோ அதற்காகவே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். மசூதிகள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்களை முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படப் போவது இல்லை. வக்பின் பெயரில் நடைபெறும் பெரிய ஊழலைத் தடுத்து, சாதாரண முஸ்லிம்களின் நலனை பாதுகாக்கவே வக்பு சட்டம் என்பதை பொதுமக்களுக்குச் சொல்ல வேண்டும்

நான் கட்சியின் ஒரு சிறிய தொழிலாளி. வக்பு மீதானப் பிரச்சாரத்தில் எனது பங்கு குறித்து பாஜகவிடமிருந்து எனக்கு இன்னும் எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை. ஆனால், புதிய சட்டத்தின் நன்மைகள் பற்றியும், வக்பில் நடைபெற்ற கொள்ளைகளையும் பொதுவெளியில் எடுத்துச் சொல்வது முக்கியம். புதிய சட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியரின் முடிவில் திருப்தி அடையவிட்டால், இப்பிரச்சினையை உயர் நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. நிக்கா நாமா இல்லாமல் முஸ்லிம்களின் திருமணம் நடந்த ஒரு காலம் இருந்தது.

ஆனால், இப்போது நிக்கா நாமாவின் பதிவுகள் மிகவும் முக்கியமாகி விட்டது. அரசிடம் பதிவு செய்வதால் அனைத்தும் மிகவும் வெளிப்படையானதாக மாற்றி, வழக்குகளின் சுமைகள் தானாகவே குறைந்தன. வக்பு சொத்துக்களை சிறப்பாகவும், வெளிப்படையாகவும் நிர்வகிப்பது முக்கியப் பிரச்சனை. வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருப்பதில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.

ஏனெனில், மசூதிகள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்களை முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்போவது இல்லை. நன்கொடையாக வழங்கப்பட்ட வக்பு சொத்துக்களை அதன் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். ஒரு மருத்துவமனை அல்லது அனாதை இல்லத்திற்கான நன்கொடையை, வணிக வளாகத்தை உருவாக்குவதற்கு திருப்பி விடப்படுவது முறையற்றது. பிரதமர் நரேந்திர மோடி வக்பை முறையாக நடத்த விரும்புகிறார்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த குஜ்ஜார் முஸ்லிம் சமூகத்தின் குலாம் அலி, 2008ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அம்மாநிலத்தின் பாஜக செயலாளர் மற்றும் செய்தித்தொடர்பாளராகவும் அவர் உள்ளார். 2022ஆம் ஆண்டு, அவரை மத்திய அரசு மாநிலங்களவைக்கு பரிந்துரைத்தது. இது மாநிலத்தில் உள்ள குஜ்ஜர்கள் மற்றும் பக்கர்வால் சமூகத்தினருக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையாகக் கருதப்பட்டது. வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக எம்பியான குலாம் அலி, மாநிலங்களவையில் வாக்களித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.