அறத்தின் உருவாமகத் திகழும் ரிஷபராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.
1. பிறருக்காகவே தன்னை அர்ப்பணம் செய்பவர் நீங்கள். அதே நேரம் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனம் நீங்கள். கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கிரனை ராசியதிபதியாகக் கொண்ட உங்களுக்கு 6-வது ராசியில் புத்தாண்டு பிறப்பது, மிகவும் யோகமான அமைப்பு.
2. சோர்வு நீங்கி துடிப்புடன் செயலாற்றுவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். பழைய கடனை பைசல் செய்ய வழிபிறக்கும். ஆகவே, தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செல்வம் பலவழிகளிலும் வரும்.

3. இந்தப் புத்தாண்டில் குருப்பெயர்ச்சி உங்களுக்குச் சாதகமாக அமைகிறது. மே – 11 முதல் ராசியிலிருந்து விலகி, 2-ம் இடத்தில் வந்து அமர்கிறார் குரு. அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். தடைப்பட்ட பதவி, வேலை, அரசுவழியில் அனுகூலம் ஆகியன கிடைக்கும்.
4. குடும்பத்தாரின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். இதுவரையில் வீட்டில் அடைந்துகிடந்த நிலை மாறி, பரபரப்பாக இயங்க ஆரம்பிப்பீர்கள்.
5. வெளிவட்டாரத்திலும், தொழில் மற்றும் பணியிடத்திலும் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பிரச்னைகொடுத்த சத்ரு இனி ஓடி ஒளிவார். மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும். வழக்கமான ஒரே வேலை என்றிருந்த நிலை மாறி, பல விஷயங்களிலும் நாட்டம் கொள்வீர்கள்.
6. சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகள், ஏதோ ஒருவிதத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்தது அல்லவா! இனி, வீடு-மனை வாங்கு விஷயத்தில் நல்ல வழிபிறக்கும். வீடு வாங்கப் புதிய கடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும்.
7. திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும். சிலருக்குப் பிள்ளைப் பாக்கியமும் ஏற்படும். பேச்சில் இனிமை கூடும். பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றியாகும்.
8. ஏப்ரல்- 26 முதல் கேது 4-ல் வந்து அமர்கிறார். ஆகவே, பல வகையிலும் உங்களைப் பக்குவப்பட வைப்பார். எனினும் அம்மாவின் ஆரோக்கியம் மற்றும் வாகனப்பயணத்தில் கவனம் தேவை. இரவு நேரப் பயணங்கள் வேண்டாம்.

9. நட்புக்கு மதிப்பளிப்பவர் நீங்கள். எனினும் கூடாபழக்க வழக்கங்கள் சேர்ந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். புதியவர்களுக்கு அதிகம் உரிமை கொடுக்கவேண்டாம்.
10. வீட்டில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். பிள்ளைகள் இனி உங்களின் விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்துகொள்வார்கள். அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
11. ராகு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். தொட்ட காரியங்கள் வெற்றி அடையும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணவரவு அதிகரிப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.
12. ராகு உங்களைச் சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். விலையுயர்ந்த பொருள்களால் வீடு அழகாகும். எனினும், வேலைச்சுமை, இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
13. வெளியிடங்களில் வீண் பழி, உங்களைப்பற்றிய தவறான அபிப்ராயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே, சொல்லிலும் செயலிலும் வேகம் வேண்டாம். நிதானத்திச் செயல்படுங்கள்.
14. தொழிலில் திருப்தியான நிலையே. எனினும் வெள்ளந்தியாக எல்லோரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டாம். சில விஷயங்களில் ரகசியம் காப்பது அவசியம். முதலீடுகளில் கவனம் தேவை. கடின உழைப்பு ஆதாயம் தரும்.
15. சுக்ரன் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. ஆகவே, திருவரங்கப் பெருமாளை தரிசித்து வாருங்கள். சனிக் கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் ஆலயத்துக்குச் சென்று துளசி சமர்ப்பித்து வழிபடுங்கள். முன்னேற்றம் உண்டாகும்.