கீவ்: வடக்கு உக்ரைன் நகரமான சுமியின் மீது ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட மோசமான இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் எதிர்வினையைக் கோரியுள்ளார். தரையில் கிடக்கும் சடலங்கள், அழிக்கப்பட்டப் பேருந்து, வீதிகளின் மத்தியில் எரிந்து கிடக்கும் வானங்கள் என மனதை உலுக்கும் காட்சிகளை காட்டும் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர், “அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பது, அயோக்கியர்களால் மட்டுமே இவ்வாறு செயல்பட முடியும். இது கர்த்தர் ஜெருசலத்துக்குள் நுழைந்ததைக் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு அன்று மக்கள் தேவாலையம் செல்லும் நாளில் நடந்துள்ளது.
ரஷ்யா, இந்த மாதிரியான தீவிரவாதத்தையே விரும்புகிறது மற்றும் போரை நீட்டிக்க விரும்புகிறது. ஆக்கிரமிப்பாளர் மீது அழுத்தம் கொடுக்காமல் அமைதி சாத்தியமாகாது. பேச்சுவார்த்தைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வான்வழித்தாக்குதல்களை தடுத்து நிறுத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உள்துறை அமைச்சர் கூறுகையில், “தாக்குதல் நடந்த போது, மக்கள் தெருக்களில் வாகனங்களில், கட்டிடங்களினுள் இருந்தனர். ஒரு முக்கியமான தேவாலயத் திருநாளில் அப்பாவிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் தவறான தகவல்களை எதிர்ப்பதற்கான மையத்தின் பாதுகாப்பு அதிகாரியான ஆண்ட்ரி கோவலென்கோ, “அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் ரஷ்யா சென்று வந்தப் பின்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடிமக்கள் மீதான தாக்குதல்களைச் சுற்றி.. ரஷ்யா இந்த ராஜதந்திரம் என்று அழைக்கப்படும் விஷயங்களை கட்டமைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், உக்ரைன் அமைதி ஒப்பந்தத்துக்காக புனித பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தங்கள் நாட்டின் அணுசக்தி உள்கட்டமைப்பு மீது வெள்ளிக்கிழமை ஐந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது என்று தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சியில் இத்தகைய தாக்குதல்களை நடத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த மாதத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் பிறநாட்டின் அணு சக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஒப்புக்கொண்டன. ஆனாலும் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இரு தரப்பும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.