வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மசோதாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். முன்னதாக மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மசோதா நிறைவேற்றத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “முஸ்லிம் சகோதரர்களோடு இணைந்து வக்பு உரிமமை சட்டப் போராட்டத்தில் தவெகவும் பங்கேற்கும்” என தெரிவித்திருந்தார். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தில் விஜய் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.