‘பத்திரிகையாளர் சந்திப்பு!’
லக்னோவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். ‘எங்களின் நிலைமையை மாற்ற தோனியிடம் மந்திரக்கோல் ஒன்றும் இல்லை.’ என ப்ளெம்மிங் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவர் பேசியவை இங்கே

‘தோனியால் மட்டும் வெல்ல முடியாது!’
தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுவிட்டார். ஆனால், அவரிடமும் மந்திரக்கோல் ஒன்றும் இல்லை. நாங்கள் எல்லாரும் அவருடன் ஒன்றாகக் கூடி உழைத்துதான் தோல்விகளிலிருந்து மீள வேண்டும்.

இப்படியான நிலைமைகளில் நானும் தோனியும் ஏற்கெனவே இருந்திருக்கிறோம். இதிலிருந்து மீள நிறையவே எனர்ஜி தேவைப்படும். நாங்கள். சரியான செயல்களில்தான் எங்களின் எனர்ஜியை செலவளிக்கிறோமா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
‘சிக்சர்கள் மட்டுமே போதாது!’
சிக்சர்கள் அடிப்பது மட்டுமே கிரிக்கெட் அல்ல. பவர் ஹிட்டிங்கின் மீதும் சிக்சர்களின் மீதும் அதிக ஈர்ப்பு இருப்பதை அறிகிறேன். ஆனால், சில அணிகள் இன்னமும் கிரிக்கெட்டின் இயல்புத்தன்மை மாறாமல் நன்றாக ஆடுவதையும் பார்க்கிறோம்.

பேட்டுக்கும் பந்துக்கும் இடையே ஒரு சமநிலை இருப்பதுதான் கிரிக்கெட்டின் அழுகு. சிக்சர் அடிக்கும் திறன் எனக்கும் பிடித்ததுதான். ஆனால், பேட்டுக்கும் பந்துக்கும் இடையே சமநிலை நீடிப்பதுதான் கிரிக்கெட்டின் நலனுக்கு சிறந்தது.

‘கம்பேக் பற்றி!’
நாங்கள் இருக்கும் நிலையிலிருந்து கம்பேக் கொடுப்பது கடினமான விஷயம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இங்கிருந்து சிறுசிறு அடிகளாக கவனமாக எடுத்து வைத்து பேட்டிங், பௌலிங், பீல்டிங் என மூன்றிலுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறோம். கடந்த போட்டியில் நாங்கள் சவாலளிக்கும் வகையில் ஆடவே இல்லை. அதுதான் எங்களுக்கு பெருத்த வேதனையைக் கொடுத்திருக்கிறது.
உண்மையிலேயே நாங்கள் யார் எங்களின் பலம் என்னவென்பதை உள்ளூர நாங்கள் தேட வேண்டும். நாங்கள் ஒரு பாரம்பரியமான பெருமைமிக்க அணிகளின் பிரதிநிதியாக எங்களின் செயல்பாட்டைக் கொடுக்கவேண்டும். எங்களின் மனதில் இப்போது ஏற்பட்டிருக்கும் காயத்தை அப்படியே ஊக்கமாக மாற்ற வேண்டும். இப்படி வார்த்தைகளில் பேசிக்கொண்டிருக்கவும் விருப்பமில்லை. வீரர்கள் முக்கியமான தருணங்களை கைப்பற்றுவதிலும் பார்முக்கு திரும்புவதிலுமே எல்லாம் இருக்கிறது
‘சிவம் துபேக்கு காயம்!’
சிவம் துபேவின் காயம் கொஞ்சம் கவலையைத்தான் கொடுத்திருக்கிறது. ஆனால், அவருக்கு தசைப்பிடிப்புதான் ஏற்பட்டிருக்கிறது. இப்போது பார்க்கையில் நன்றாகத்தான் இருக்கிறார். இன்னொரு வீரரை காயத்தால் இழக்கும் சூழல் வராது என நம்புகிறேன்.
‘பரிசீலனையில் ஷேக் ரஷீத்!’
ஷேக் ரஷீத்தை லெவனுக்குள் கொண்டு வரும் பரீசிலனையில்தான் இருக்கிறோம். எந்த வாய்ப்பையும் வேண்டாமென ஒதுக்கும் மனநிலையில் இல்லை. எல்லாவிதமான சாத்தியங்களையும் முயன்று பார்க்கவே விரும்புகிறோம்.