புதுடெல்லி: மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தால், உத்தரபிரதேசத்தில் வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்வது பெரும் சவாலாகி உள்ளது.
வக்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன், உ.பி.யில் ஷியா மற்றும் சன்னி வக்பு வாரியங்கள் எந்த தலையீடும் இல்லாமல் சொத்துகளை பதிவு செய்ய முடிந்தது. புதிய சட்டம் அமலான பிறகு, அதில் குறிப்பிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அவை வக்பு சொத்துகளாக பதிவு செய்யப்படும். அவற்றில் முக்கியமாக வக்பு சொத்துகள் 1952 வருவாய் பதிவுகளில் பட்டியலிடப்பட வேண்டும்.
மேலும், சொத்தை வழங்கிய நபரின் பெயரும் அதில் இடம்பெற வேண்டும். இதுதொடர்பாக உ.பி. வக்பு வாரியங்கள் இனி புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
இதை செய்து முடித்த பிறகு வக்பு வாரியங்கள் அனுப்பும் சொத்து ஆவணங்கள், 1952 வருவாய் பதிவுகளில் உள்ளதா என்று தாலுகா அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகுதான் சொத்துகள் பதிவு செய்யப்படும்.
இதனால், உ.பி. வக்பு வாரியங்கள் தங்களுடைய சொத்துகளுக்கு உரிமை கோர மாநில அரசிடம் கடுமையாக வாதிடும் நிலை உருவாகி உள்ளது. உ.பி.யில் ஷியா, சன்னி வக்பு வாரியங்களின் பதிவுகளில் சுமார் 1,32,140 சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், 2,528 சொத்துகள் மட்டுமே மாநில அரசின் வருவாய் பதிவுகளில் உள்ளதாக மாநில சிறுபான்மை நலத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீதமுள்ள சொத்துகளை பதிவு செய்வது புதிய வக்பு சட்டத்தால் மிகவும் சிக்கலாகி உள்ளது. உ.பி.யில் மசூதிகள், இமாம்பாடாக்கள் மற்றும் கல்லறைகள் உட்பட பல வக்பு சொத்துகள் அரசுக்கு சொந்தமானவை என்று மாநில அரசு கூறியது சர்ச்சையானது.
முகலாயர், ஆங்கிலேயர்: ஏனெனில், அரசு கூறும் சொத்துகள் அனைத்தும் இந்திய சுதந்திரத்துக்கு முன்பு முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டவை. இந்த சொத்துகளில் பலவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இதனால், அவற்றை அரசு சொத்தாக கருத கூடாது என்று உ.பி. வக்பு வாரியங்கள் வாதிடுகின்றன.
புதிய சட்டத்தின்படி, வக்பு வாரியங்கள் தங்களுடைய முந்தைய அறிவிப்புகளை ரத்து செய்து புதிய சொத்துகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1952 பதிவுகளில் உரிமை சரிபார்ப்பு மற்றும் அரசு நிலமாக வகைப்படுத்தப்படாதது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. புதிய சட்டத்தின்படி சொத்து ஆவண பதிவுகளில் தாலுகா நிர்வாகம் முரண்பாடுகளை கண்டறிந்தாலோ அல்லது உரிமை கோரல்கள் புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலோ நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால், வக்பு வாரியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகளில் கணிசமாக இழக்க நேரிடும் என்கின்றனர். மேலும் வக்பு சொத்துகள் அரசு சொத்தாக மாறிவிடும் வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற சிக்கல்களால் வக்பு சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.