‘லக்னோ vs சென்னை’
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து வருகிறது. லக்னோ முதலில் பேட் செய்கிறது.

இந்நிலையில், அந்த அணியின் அபாயகரமான பேட்டரான நிக்கோலஸ் பூரனை சென்னை அணி வெறும் 8 ரன்களிலேயே வீழ்த்தியிருக்கிறது. நடப்பு சீசனின் ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கும் நிக்கோலஸ் பூரனின் இந்த சீசனில் எடுத்திருக்கும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.
‘அபாயகரமான பூரன்!’
போட்டிக்கு முன்பாக ஒரு புள்ளிவிவரம் அடிக்கடி குறிப்பிடப்பட்டுக் கொண்டே இருந்தது. அதாவது, இந்த சீசனில் சென்னை அணி மொத்தமாக அடித்திருக்கும் சிக்சர்களின் எண்ணிக்கை 32. தனிப்பட்ட முறையின் பூரன் மட்டும் இந்த சீசனில் அடித்திருக்கும் சிக்சர்களின் எண்ணிக்கை 31. மிரட்டலான புள்ளிவிவரம் இது.

பூரன் எவ்வளவு அபாயமான வீரர் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். இந்தப் போட்டிக்கு முன்பாக ஆடியிருக்கும் 6 போட்டிகளில் 349 ரன்களை எடுத்திருந்தார். 4 அரைசதங்கள். ஸ்ட்ரைக் ரேட் 230 க்கும் மேல் இருந்தது. மும்பைக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் 12 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். மற்ற எல்லா போட்டிகளிலும் உள்ளே நின்று சிக்சர் மழை பொழிந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
‘முதல் வெற்றி!’
அப்படிப்பட்ட பூரனைத்தான் சென்னை அணி வெறும் 8 ரன்களில் சுருட்டியிருக்கிறது. பொதுவாகவே பூரன் அதிரடியாக ஆடினாலும் வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின்னர்களிடம்தான் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக பூரனின் ஸ்ட்ரைக் ரேட் 300 க்கும் மேல் இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 200 க்கு கீழ்தான் இருந்தது.
ஆக, சீக்கிரமே முதல் விக்கெட்டை எடுத்து பூரனை பவர்ப்ளேக்குள் வர வைத்து வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் எதிர்கொள்ள வைத்ததே சென்னையின் முதல் வெற்றி.

கலீல் அஹமதுவும் அன்ஷூல் கம்போஜூம் ஒரு வித திட்டத்தோடுதான் பூரனுக்கு வீசினார். பூரன் 9 பந்துகளை எதிர்கொண்டார். இந்த 9 பந்துகளில் பெரும்பாலான பந்துகளை குட் லெந்தாகவும் ஷார்ட்டாகவுமே வீசியிருந்தனர். வட்டத்துக்கு வெளியே பீல்ட் செட்டப்பும் அதற்கு ஏற்றவாறே இருந்தது. அதாவது டீப் தேர்டுமேன், டீப் மிட் விக்கெட் வைத்து ஒரு ஓவரில் டீப் ஸ்கொயர் டீப் மிட் விக்கெட் வைத்து ஒரு ஓவரிலும் அட்டாக் செய்தனர்.
‘வலையில் விழுந்த பூரன்!’
ஷார்ட் பிட்ச் டெலிவரியில் சிக்க வைப்பதற்கான பீல்ட் செட்டப் இது. ஆனால், அன்ஷூல் கம்போஜ் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து இன்கம்மிங் டெலிவரியாக புல் லெந்தில் ஸ்டம்ப் லைனில் ஒரு டெலிவரியை வீசுகிறார். பீல்ட் செட்டப்புக்கு கொஞ்சம் சம்பந்தம் இல்லாத சர்ப்ரைஸ் டெலிவரி இது. இதை எதிர்பார்க்காத பூரன் பந்ரை பேடில் வாங்கி Lbw ஆகினார்.

அன்ஷூன் கம்போஜ் ரிவியூவ் எடுத்த ஆக வேண்டும் என உறுதியாக இருந்தார். பேட் பட்டிருக்கக்கூடும் அல்லது லெக் ஸ்டம்பை மிஸ் செய்யும் என நினைத்து தோனியே ரிவியூவ் எடுக்க தயங்கினார். கம்போஜின் அபரீத நம்பிக்கைக்காக மட்டுமே தோனி ரிஸ்க் எடுத்து ரிவியூவ் சென்றார். அதற்கான பலன் கிடைத்தது. நிக்கோலஸ் பூரனை ரொம்பவே குறைவான ரன்களில் சென்னை அணி வீழ்த்தியது. குறிப்பாக, அவரை ஒரு சிக்சர் கூட அடிக்கவிடவில்லை.