18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோ ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரரான மார்க்ரம் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பூரான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷுடன் ரிஷ்ப் பண்ட் கைக்கோர்த்தார். இருவரும் ரன்களை சேர்க்க தொடக்க மார்ஷ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுமுனையில் இருந்த ரிஷப் பண்ட் தொடர்ந்து ரன்களை சேர்த்தார். ஆயூஸ் பதோனி 22, அப்துல் சமாத் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அரைசதம் கடந்த ரிஷப் பண்ட் கடைசி ஓவரில் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரானா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 52 ரன்கள் சேர்த்த நிலையில், ஷேக் ரசித் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 37, ராகுல் திருப்பதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஷிவம் துபே உடன் கைக்கோர்த்த தோனி, அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்துச் சென்றார். அவர் 4 ஃபோர்கள் மற்றும் 1 சிக்சர் என 26 ரன்கள் விளாசினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 19.3 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்று தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ளது.
மேலும் படிங்க: LSG-க்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்!
மேலும் படிங்க: டெல்லி அணி கேப்டன் அக்சர் படேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்.. என்ன காரணம்?