புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்லூரிச் சுவர்களில் பசு சாணத்தால் சுவர்களில் பூச்சு செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களது ஆய்வின் ஒரு பகுதி என அதன் முதல்வர் முனைவர் தியூஷ்வாலா கருத்து கூறியுள்ளார்.
நாட்டின் தலைநகரான டெல்லி பல்கலைக்கழகமும் அதன் உறுப்புக் கல்லூரிகளும் அமைந்துள்ளன. மத்திய அரசின் பல்கலைகழகமான இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக லட்சுமிபாய் கல்லூரியும் உள்ளது. இக்கல்லூரியில் அதன் முதல்வர் சுவர்களில் மாட்டு சாணத்தைப் பூசுவதுபோல் ஒரு காணொளி மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. அதற்கானக் காரணங்களாக, கோடைகாலத்தில் வகுப்பறைகளை இயற்கையான முறையில் குளிர்ச்சியாக வைத்திருப்பதே இதன் நோக்கம் எனவும் கூறப்பட்டது.
இது குறித்து அக்கல்லூரியின் மாணவர்கள் கேட்டபோது முதல்வர் தியூஷ்வாலா, “இது ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதி” என்று தெரிவித்துள்ளார். இக்கல்லூரியின் யோகா சி பிளாக்கில் இந்த சாணம் சுவர்களில் பூசப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை முழுவதுமாக, டெல்லியின் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதன் காட்சிப்பதிவில், லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் முனைவர் தியுஷ் வாலா, வகுப்பறைச் சுவர்களில் மாட்டு சாணத்தைப் பூசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தனது ஊழியர்களுடன் சேர்ந்து முதல்வரே சுவர்களில் மாட்டு சாணத்தைப் பூசுகிறார். இந்த காணொளியை கல்லூரியின் பேராசிரியர்களில் ஒருவருமான முதல்வரே பகிர்ந்துள்ளார். அக்காணொளியில் முதல்வர் தியூஷ்வாலா கூறும்போது, “இது கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் ஒரு ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதி. இந்த ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்குப் பிறகு முழுமையான தரவு பகிரப்படும். இந்த ஆராய்ச்சி மண், மாட்டு சாணம் போன்ற இயற்கை பொருட்களைத் தொடுவதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதைக் காட்டுகிறது.
இதனால், நானே ஒரு அறையின் சுவரில் மாட்டு சாணத்தைப் பூசினேன். சிலர் எந்த புரிதலும் இல்லாமல் வதந்திகளைப் பரப்புகிறார்கள். கோடையில் வகுப்பை குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரு சுதேசி வகை நுட்பம் இது.” எனத் தெரிவிக்கிறார்.
இந்த காணொளி குறித்து முதல்வர் புயூஷ்வாலாவிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர், ”இங்கு கற்பிப்பவர்கள் இப்போது வகுப்புகளை ஒரு புதிய வடிவத்தில் பார்ப்பார்கள். உங்கள் கற்பித்தல் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்குவதே எங்கள் முயற்சி.” என்று பதிலளித்து வருகிறார்.