‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் எஸ்.எஸ். ஸ்டான்லி. உடல் நலக்குறைவால் இன்று காலமானார். ‘பெரியார்’ படத்தின் மூலம் நடிகராகவும் ஆனவர், ‘ராவணன்’ ‘கடுகு’ ‘பொம்மை நாயகி’, ‘மகாராஜா’ என பல படங்களில் நடிகராகவும் கவனம் ஈர்த்து வந்தார். அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஶ்ரீகாந்தின் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ ‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ என சில படங்களை இயக்கினார். ‘பெரியார்’ படத்தில் அறிஞர் அண்ணாவாக நடித்தார். இயக்குநராக இருந்தவர் அதன் பின் நடிகராக பிசியானார். மணிரத்னத்தின் ‘ராவணன்’ உள்பட சில படங்களில் நடித்ததுடன், இணை இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறார். திருமணம் செய்துகொள்ளவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ‘பராசக்தி’ படத்தில் கூட அறிஞர் அண்ணாவாக இவரை நடிக்க கேட்டனர். மருத்துவர்கள் ஆலோசனையின்படி ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தால், நடிக்க முடியாமல் ஆனது. இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, ‘ரோஜாக்கூட்டம்’, ‘சொல்லாமலே’ ஆகிய படங்களின் இயக்குநர் சசியிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். சசியிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்திருக்கிறார் ஸ்டான்லி. அவரது நினைவுகள் குறித்து கனத்த இதயத்துடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் சசி.
`நண்பராக ஈடு செய்ய முடியாத இழப்பு’
”பேசமுடியாத சூழலில் இருக்கிறேன். நண்பர் ஸ்டான்லி, 30 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம். அருமையான மனிதர். . ‘சொல்லாமலே’ படம் இயக்க அவரும் ஒரு காரணம். ஒரு இணை இயக்குநராகத்தான் என்னிடம் அவர் நட்பானார். ‘ஏப்ரல் மாதத்தில்’ இருந்து அவருக்கு வாழ்க்கை வசந்தமானது. எதையும் ரொம்பவும் பிராக்டிக்கலாக அணுக்ககூடியவர். காரணம், படப்பிடிப்பில் சில சமயங்களில் தவிர்க்க இயலாமல் கோபப்பட நேரிடும். ஆனால், ஸ்பாட்டில் அவர் இருந்தால், அப்படி எந்த டென்ஷனும் இல்லாமல் என்னை அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். ஒரு நல்ல நண்பராகவும், ஒரு இணை இயக்குநராகவும் இருப்பார்.

கல்யாணமாகாதவர். அவரது அண்ணன், தங்கை ஊரில் இருக்கிறார்கள் என்பதால், இங்கே அவருக்கென நான் உள்பட சில நண்பர்கள் இருக்கிறோம். எங்களுடன் தான் பேசிக்க்கொண்டிருப்பார். அவருக்கு உடல் நலன் பாதிப்பு ஏற்பட்ட போது, இயக்குநர்கள் பலரும் ஒன்று சேர்ந்து அவரை கவனித்து வந்தோம். நேற்று இரவு கூட அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நல்லபடியாக தான் பேசினார். அவரது இழப்பு நண்பராக ஈடு செய்ய முடியாத இழப்பு. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ” என்கிறார் கண்களில் நீர்த்திரள!