சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சம்பத் (76). கடந்த 11-ம் தேதி இரவு சம்பத், மார்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலிகிராமம் அம்பேத்கர் தெருவில் நடந்து சென்றபோது வேகமாக வந்த பைக் ஒன்று முதியவர் சம்பத் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது 16 வயது சிறுவன் பைக்கை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய சிறுவன், பைக்கின் உரிமையாளரான சிறுவன் அம்மா ரேவதி ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், ரேவதியை பிடித்து விசாரணை நடத்தி அவரை கைது செய்த போலீஸார், காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். அதே நேரத்தில் சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கூறுகையில், “சிறுவர், சிறுமிகள் பைக் ஓட்டி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் பைக்கின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில்தான் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் ஒட்டிய பைக் அவரின் அம்மாவின் பெயரில் உள்ளது. அதனால்தான் இந்த வழக்கில் சிறுவனின் அம்மா ரேவதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
