Meta vs FTC Row: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களின் தாய் நிறுவனமாக மெட்டா உள்ளது. முன்னதாக பேஸ்புக் பெயரில் இருந்த நிலையில், மெட்டா என சில ஆண்டுகளுக்கு முன் பெயர் மாற்றம் பெற்றது.
இந்நிலையில், மெட்டா நிறுவனத்தில் இருந்து இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய தளங்கள் தனித்தனியே பிரியும் சூழல் உண்டாகி உள்ளது. மெட்டா நிறுவனம் தற்போது எதிர்கொள்ளும் நம்பிக்கையின்மை விசாரணையினால் இந்த சூழலில் உருவாகி இருக்கிறது.
Meta vs FTC Row: மெட்டா மீது அரசு முகமை வழக்கு
டொனால்ட் டிரம்பின் கடந்த ஆட்சிக்காலத்தில், அதாவது 2020ஆம் ஆண்டு ஃபெடரல் டிரெட் கமிஷன் (FTC) என்ற அமெரிக்க அரசின் ஏஜென்சி, மெட்டாவுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய தளங்களை வாங்கியதன் நோக்கம், சமூக ஊடக சந்தையில் ஏகபோகத்தை அனுபவிப்பதே ஆகும் என மெட்டா மீது FTC குற்றஞ்சாட்டியது.
Meta vs FTC Row: FTC வைக்கும் குற்றச்சாட்டுகள்
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், வளர்ந்து வரும் நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கு பதிலாக அவற்றை வாங்குவதை ஒரு உத்தியை செயல்படுத்தினார், இது அவர்களது எதிர்காலத்திற்கு அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம் என FTC தெரிவிக்கிறது. இந்த அணுகுமுறையால், மெட்டா 2012ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமையும், 2014ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்பையும் வாங்கியதாக FTC கூறியது.
சிறிய புகைப்படப் பகிர்வு செயலியாக இருந்த இன்ஸ்டாகிராமை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்து பேஸ்புக் 2012ஆம் ஆண்டில் வாங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வாட்ஸ்அப்பை 22 பில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்து வாங்கியது. இந்த இரண்டு நிறுவனங்களை கையகப்படுத்தியதன் மூலம் மொபைல் பயனர்களிடையே பேஸ்புக் அதன் இருப்பை தக்க வைத்துக்கொண்டது.
தனது போட்டியாளர்களாக மாறக்கூடிய வளர்ந்து வரும் நிறுவனங்களை பேஸ்புக் (இப்போது மெட்டா) வேண்டுமென்றே வாங்கியது என்பது FTC தரப்பு வாதமாக உள்ளது. இருப்பினும், இந்த வழக்கு யதார்த்தத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என FTC வாதத்திற்கு மெட்டா பதிலளித்திருந்தது. மேலும், தற்போதைய இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை டிக்டோக், யூ-ட்யூப், ஐமெசேஜ் மற்றும் X போன்ற தளங்களுடன் தீவிரமாக போட்டியிடுகின்றன என்றும் மெட்டா வாதிடுகிறது.
Meta vs FTC Row: இன்ஸ்டா, வாட்ஸ்அப்பை விற்குமா மெட்டா?
தற்போது டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் சூழலில், ஒருவேளை இந்த வழக்கில் மெட்டாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்பட்சத்தில், மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது அதன் வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2025ஆம் ஆண்டளவில், அமெரிக்காவில் மெட்டாவின் விளம்பர வருவாயில் இன்ஸ்டாகிராம் மட்டும் 50.5% பங்களிப்பதாக என்று கணிக்கப்பட்டுள்ளது.
Meta vs FTC Row: மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் விசாரணை
தற்போது இந்த வழக்கில் மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த விசாரணை இரண்டு நாள்களுக்கு நீடிக்கலாம். ஜுக்கர்பெர்க்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை கையகப்படுத்துவதற்கான மெட்டாவின் காரணத்தை விளக்குவதை மையமாகக் கொண்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு மெட்டாவை மட்டுமல்ல, சமூக ஊடக சந்தையில் உள்ள டிக்டோக், ஸ்னாப்சாட் மற்றும் யூடியூப் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களையும் பாதிக்கும்.