"முருகன் அனைவருக்கும் நல்ல சக்தியை வழங்க வேண்டும்" – குமரி கோயிலில் வேல் பூஜை செய்த சுரேஷ் கோபி!

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள வேளிமலை குமாரகோயில் முருகன் திருத்தலம் தமிழகம் மற்றும் கேரள பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. நவராத்திரி விழாவுக்காக இங்குள்ள முருகப்பெருமான் திருவனந்தபுரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இருமாநில அரசு விழாவாக கொண்டாடப்படும். பிரசித்தி பெற்ற வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு  துறை இணை அமைச்சரான நடிகர் சுரேஷ் கோபி இன்று சுவாமி தரிசனம் செய்தார். திருச்சூர் தொகுதியில் எம்.பி-யாக வெற்றிபெற்ற நிலையில் பல்வெறு வழிபாடுத்தலங்களில் காணிக்கை செலுத்தியும், வழிபாடுகள் நடத்தியும் வரும் சுரேஷ் கோபி, தனது மனைவி, இரு மகள்கள், மகன்கள், அம்மா ஆகியோருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகம் சார்பாக இந்து அறநிலைய துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள பித்தளை வேலுடன் கோயிலுக்கு வந்திருந்தார் சுரேஷ் கோபி. முதலில் கணபதி சன்னதியில் வழிபட்டார். பின்னர் வள்ளி சமேதரராக காட்சியளிக்கும் முருகபெருமானை தரிசனம் செய்தார். சுரேஷ் கோபியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறு வேல்களை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தினர். சுரேஷ் கோபி கொண்டு வந்த வேலை முருகபெருமான் காலடியில் வைத்து பூஜைசெய்யும்படி அர்ச்சகர்களிடம் கேட்டுக்கொண்டார். பூஜைக்குப் பின்னர் அந்த வேலை திரும்ப பெற்று கொண்டார் சுரேஷ் கோபி. சுரேஷ் கோபிக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அர்ச்சகர்கள் வாழை இலையில் பிரசாதம் வழங்கினர்.

முருகன் சன்னதியில் வழிபட்ட சுரேஷ் கோபி

கோயிலில் வழிபட்டுவிட்டு வெளியே வந்த சுரேஷ் கோபியுடன் அங்கிதுந்த பக்தர்களும் கோயில் ஊழியர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளர் குமரி பா.ரமேஷ் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முருகர் படம் நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, “குமாரகோயிலுக்கு இரண்டாவது முறையாக குடும்பத்தோடு வந்துள்ளேன். சுவாமி தரிசனம் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முருகனை வேண்டி பிராத்தனை செய்துவிட்டு மகிழ்ச்சியாக வீட்டிற்கு செல்கிறோம். செய்யும்  வேலைகள் நன்றாக அமைய வேண்டும், மக்களுக்கு தகுந்த வேலைகள் அமைய வேண்டும், முருகன் அனைத்து மனிதர்களுக்கும் நல்ல சக்தியை வழங்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.