நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

1937ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் இருந்து நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமெிடெட்(ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை ரூ.5 லட்சம் முதலீட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி, ஏஜெஎல் நிறுவனத்தில் 1,057 பங்குதாரர்கள் இருந்தனர். அதனால் இந்த நிறுவனம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல.

ஏஜெஎல் நிறுவனம் சார்பில் ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன், உருது மொழியில் குவாமி ஆவாஸ் ஆகிய நாளிதழ்கள் 2008 வரை வெளிவந்தன. அதன்பின் இந்நிறுவனம் இழப்பை சந்தித்து முடங்கியது. இந்நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், மும்பை, இந்தூர், பாட்னா, பஞ்ச்குலாம் ஆகிய இடங்களில் ரூ. 5000 கோடி மதிப்
பிலான சொத்துக்கள் உள்ளன.

இந்நிறுவனம் நாளிதழ்களை மீண்டும் இயக்க காங்கிரஸ் கட்சியிடமிருந்து ரூ. 90.25 கோடி வட்டியில்லா கடன் பெற்றது. ஆனால், இந்த கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில் ராகுல் காந்தியை இயக்குனராக கொண்டு ‘யங் இந்தியன்’ என்ற நிறுவனம் ரூ.5 லட்சம் முதலீட்டில் கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. இதன் இயக்குநர்களில் ஒருவராக சோனியா காந்தியும் இணைந்தார். இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் ராகுல்காந்தி, சோனியா காந்தியிடம் உள்ளது. மீதி 24% பங்குகள் காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரிடம் உள்ளது.

இந்நிலையில் ஏஜெஎல் நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்ற ரூ.90 கோடி கடன், அதன் பங்குகளை யங் இண்டியன் நிறுவனத்துக்கு மாற்ற 2011-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏஜெஎல் நிறுவனம் தனது நாளிதழ்களை மீண்டும் வெளியிட கடந்த 2016-ல் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏஜெஎல் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்படுவது தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என அதன் பங்குதாரர்கள் குற்றம்சாட்டினர். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், அலகாபாத் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆகியோரும் ஏஜெஎல் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.5,000 கோடி மதிப்புடைய சொத்துக்கள் மற்றும் பங்குகளை கொண்டுள்ள ஏஜெஎல் என்ற பொது நிறுவனத்தை, ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது எனவும், இதில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிதி முறைகேடு செய்துள்ளனர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி நீதிமன்றத்தில் 2013-ல் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதில் நிதி மோசடி நடைபெற்றதா என்பது குறித்து அமலாக்கத்துறை 2014-ல் விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க கோரும் சோனியா, ராகுல் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் 2015-ல் தள்ளுபடி செய்தது. அதன்பின் இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை 2023 ஆண்டு நவம்பரில் முடக்கியது. இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. ஏஜெஎல் நிறுவனத்தின் நிதி மோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

வதேராவிடம் 3 மணி நேரம் விசாரணை: காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, 2007-8ம் ஆண்டில் ஹரியானா மாநிலம், குருகிராம் அருகே 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தை ரூ.58 கோடிக்கு டிஎல்எப் நிறுவனத்துக்கு விற்றார். இந்த விற்பனையில் பணமோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் நேற்று ராபர்ட் வதேரா, தனது வீட்டில் இருந்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நடந்தே சென்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு முன்னதாக ராபர்ட் வதேரா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது. மக்கள் என்னை நேசிக்கின்றனர். நான் அரசியலில் சேர விரும்புகிறேன். அரசியலில் சேர விருப்பம் தெரிவிக்கும் போதெல்லாம் என்னை வீழ்த்தவும், உண்மை பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பவும் பழைய பிரச்சினைகளை எழுப்புகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு 15 முறை சம்மன் அனுப்பி இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் 10 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.