பேசின்பிரிட்ஜ் பாலம் அகலப்படுத்தப்படுமா? – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

சென்னை: பேசின்பிரிட்ஜ் பாலம் அகலப்படுத்தப்படுமா என்பது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த பதிலும் வருமாறு:

பெரம்பூர் ஆர்.டி.சேகர்( திமுக): ‘வியாசர்பாடியில் இருந்து சென்ட்ரல், பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் பேசின் பாலத்தை கடந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பேசின் பிரிட்ஜ் பாலத்தை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: பேசின் பாலம் மிகவும் புகழ்பெற்ற பாலமாகும். அந்த பாலம் நெரிசலான பகுதிதான். பாலத்தை விரிவு செய்யலாமா அல்லது புதிய பாலம் கட்டலாமா என்பது குறித்து ஆய்வு செய்து சாத்தியக்கூறு இருந்தால் இந்த ஆண்டே பணிகள் தொடங்கப்படும்.

திருப்போரூர் எஸ்.எஸ் பாலாஜி (விசிக): கொட்டிவாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத் துறையின் இணைப்பு மேம்பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

அமைச்சர் எ.வ.வேலு: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது 71 பாலங்களின் பணிகள் நிலுவையில் இருந்தன. அதில் தற்போது 36 பாலங்கள் பணி நிறைவடைந்துள்ளன. மேலும், 35 பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமான மேம்பாலங்களை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ராயபுரம் ரா.மூர்த்தி (திமுக): திருவொற்றியூர், எண்ணூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி வழியாக சென்னை வரும் அனைத்து வாகனங்களும் ஆர்.கே.நகர் சூரிய நாராயண செட்டி தெரு- ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே, சூரிய நாராயண செட்டி தெருவில் இருந்து ஆர்.கே.நகர் சுங்கச் சாவடி வரை 3 கி.மீட்டருக்கு மேம்பாலம் அமைத்து தரவேண்டும்.

அமைச்சர் எ.வ.வேலு: அந்த சாலை போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைதான். இதையே கோரிக்கையாக எடுத்துக் கொண்டு இந்தாண்டே முன்னுரிமை அளித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.