அமராவதி,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரம் மதுரவாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஞானேஸ்வர். இவரது மனைவி அனுஷா. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும், கடந்த 2022-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 2 ஆண்டுகள் மேலாகியும் தனக்கு திருமணமான விவரத்தை தனது பெற்றோரிடம் மறைத்து விசாகப்பட்டினம் நகரில் வேலை பார்ப்பதாக ஞானேஸ்வர் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஞானேஸ்வருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். அனுஷா கர்ப்பமான நிலையில், அவரை உதறி விட்டு வீட்டில் பார்த்த பெண்ணை மணமுடிக்க ஞானேஸ்வர் தயாரானார். இதன் காரணமாக அனுஷாவிடம் ஏதேனும் பொய் கூறிவிட்டு தப்பித்து விடலாம் என்று எண்ணிய அவர், தனக்கு புற்றுநோய் வியாதி வந்து விட்டதாகவும், அதனால் நாம் விவாகரத்து செய்து விடலாம் என்றும், நீ என்னை விட்டு பிரிந்து வேறு திருமணம் செய்து கொள் என்று அனுஷாவிடம் கட்டுக்கதை அவிழ்த்து விட்டுள்ளார்.
ஆனால் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி அனுஷா உயிரோடு இருந்தாலும் செத்தாலும், அது உன்னோடு தான் என்று உருகி பேசியுள்ளார். இதனால் வீட்டில் தினமும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது. 9 மாத கர்ப்பிணியான அனுஷாவுக்கு கடந்த திங்கட்கிழமை பிரசவத்தில் குழந்தை பிறக்க இருந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிப்பதற்காக அனுஷா தனது கணவரோடு நேற்று முன்தினம் காலை சென்றுள்ளார்.
அப்போது நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் தூங்கி கொண்டிருந்த போது யாரும் இல்லாத நேரம் பார்த்து தலையணையால் மனைவி அனுஷாவின் முகத்தில் ஞானேஸ்வர் அழுத்தியதுடன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் காலையில் சாதாரணமாக அவர் எழுந்து வெளியே சென்று விட்டார். இதையடுத்து ஒன்றும் தெரியாதவர் போல மனைவி சுயநினைவில்லாமல் கிடப்பதாக நாடகமாடி சத்தம் போட்டுள்ளார். உடனே அனுஷாவை சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்த பி.எம்.பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர். போலீசாரின் சந்தேக பார்வை கணவர் ஞானேஸ்வர் மீது விழுந்தது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்ட போது, மனைவி அனுஷாவை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஞானேஸ்வரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தில், அனுஷா மீது இருந்த மயக்கத்தில் தனது பெற்றோருக்கு தெரியாமல் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், வேற்று சமுகப்பெண்ணை மருமகளாக தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் அவரை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள எடுத்த முயற்சி எதுவும் பலனளிக்காததால் கொலை செய்து விட்டதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.