Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை சந்தித்து பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதன் ரசிகர்களுக்கு சிஎஸ்கே அணி ஓரளவுக்கு நம்பிக்கையூட்டி உள்ளது.
Chennai Super Kings: புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா சிஎஸ்கே அணி?
சிஎஸ்கே 7 போட்டிகளை விளையாடி தற்போது கடைசி இடத்தில் இருந்தாலும் அந்த அணி மீண்டு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன. இன்னும் ஓரிரு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெறும்பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் 6வது, 7வது இடத்தை பிடிக்கக்கூட அதிக வாய்ப்பு இருக்கிறது.
தற்போது புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கின்றன. ஆனால், அவை ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளன. சிஎஸ்கே 7 போட்டிகளில் விளையாடிவிட்டது. அந்த வகையில், ராஜஸ்தான் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் உடன் இன்று மோதுகிறது. நாளை மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
Chennai Super Kings: சிஎஸ்கே அடுத்தடுத்து வெல்ல வேண்டும்
இவற்றில், டெல்லியிடம் ராஜஸ்தான் தோற்று, மும்பை – ஹைதராபாத் போட்டியில் யார் தோற்றாலும் சிஎஸ்கே அணிக்கு நன்மைதான் விளையும் எனலாம். ஏனென்றால், சிஎஸ்கே அணிக்கு அடுத்த 2 போட்டிகளும் முறையே மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுடன்தான் உள்ளது. எனவே, இந்த சிஎஸ்கே இந்த 2 போட்டிகளை வென்றால் மற்ற அணிகளை விட அதிக புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணலாம்.
Chennai Super Kings: இந்த 2 வீரர்களை தூக்க வேண்டும்
சிஎஸ்கே அணி வெற்றிகளை குவிக்க வேண்டுமென்றால் நிச்சயம் பேட்டிங் ஆர்டரை சீர்ப்படுத்தியாக வேண்டும். அஸ்வினை தூக்கிய பிற்பாடு பந்துவீச்சு தாக்குதல் எப்படி முன்னேற்றம் கண்டதாக தோனி கூறினாரோ, அதேபோல் பேட்டிங் யூனிட்டில் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் ஆகியோருக்கு பதில் இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தால் கூட சிஎஸ்கே வெற்றி பெறும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
Chennai Super Kings: உள்ளே வரும் 2 இளம் வீரர்கள்
திரிபாதி, விஜய் சங்கருக்கு பதில் ஆயுஷ் மாத்ரே மற்றும் வன்ஷ் பேடியை சிஎஸ்கே எடுக்கலாம் என அறிவுரை கூறி வருகின்றனர். ஆயுஷ் மாத்ரே மும்பைச் சேர்ந்தவர் என்பதால் வரும் ஏப். 20ஆம் தேதி மும்பை வான்கடேவில் நடைபெறும் மும்பை – சென்னை போட்டியில் அவரை களமிறக்க வேண்டும் என்றும் அதுவே 17 வயது இளைஞருக்கு சரியான அறிமுகமாக இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை இவர் சேர்க்கப்பட்டால் நம்பர் 3 ஸ்பாட்டுக்கு ஷேக் ரஷீத்தும், ஓபனிங்கில் மாத்ரேவும் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Chennai Super Kings: குறைந்தபட்சம் ஒரு மாற்றமாவது தேவை
விஜய் சங்கர் கடந்த 2 போட்டிகளிலும் நல்ல அணுகுமுறையை வெளிப்படுத்தினாலும் அவரிடம் பெரியளவில் ஷாட்கள் இல்லை என கூறப்படுகிறது. எனவே இளம் வீரரான வன்ஷ் பேடி களமிறக்கி அவரது அதிரடி ஆட்டத்தை சோதித்து பார்க்கலாம். மும்பை அணி பந்துவீச்சில் அனுபவம் கொண்டது என்பதால் நிச்சயம் 2 இளம் வீரர்களை ஒரே போட்டியில் சிஎஸ்கே அறிமுகப்படுத்தாது என்றாலும் குறைந்தபட்சம் ஒரு வீரரையாவது சேர்க்க வேண்டும்.