சென்னை,
இந்திய ஓபன் தடகளம் 2025-ம் ஆண்டுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இதன்படி, சென்னையில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஈட்டி எறிதல் போட்டி ஒன்றில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற கிஷோர் ஜெனாவை பின்னுக்கு தள்ளி, யஷ் வீர் சிங் வெற்றி பெற்றார்.
இந்த ஈட்டி எறிதலின் 5-வது முயற்சியின்போது, சிறப்பாக ஈட்டி வீசிய சிங், 77.49 மீட்டர் என்ற அளவில் முதல் இடம் பிடித்து உள்ளார். கிஷோர், அவருடைய 4-வது முயற்சியில் 75.99 மீட்டர் தூரத்திற்கே ஈட்டி எறிந்து உள்ளார். இதனால், 2-வது இடத்திற்கு கிஷோர் சென்றார்.
எனினும், 2025-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான ஆடவர் ஈட்டி எறிதலில், இந்திய தடகள கூட்டமைப்பு வைத்துள்ள நுழைவுக்கான 75.36 மீட்டர் என்ற அளவை விட இருவரின் தூரமும் அதிகம் ஆகும்.
நடப்பு ஆண்டில் கொரிய குடியரசின் குமி பகுதியில் வருகிற மே மாதம் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், கலந்து கொள்பவர்களை இறுதி செய்யும் பணிக்கான முழு அதிகாரமும், இந்திய தடகள கூட்டமைப்பிடமே உள்ளது.
இந்திய ஓபன் தடகள போட்டிகள் நாடு முழுவதும் நடைபெறும். அடுத்த போட்டி வருகிற 21-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.