முல்லன்பூர்,
ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார்.
கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, பஞ்சாப் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் தரப்பில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சாஹலுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது அணியின் முயற்சி. நாங்கள் நேர்மறையாக இருந்து பவர் பிளேவில் 2 – 3 விக்கெட்டுகள் எடுத்தால் அசத்த முடியும் என்று நினைத்தோம். கொல்கத்தா ஸ்பின்னர்கள் பந்தை சுழற்றுவதைப் பார்த்தது எங்களுக்கு மிகவும் உதவியது.
குறிப்பாக நான் வீசிய முதல் பந்து திரும்பியது. அப்போது ஸ்ரேயாஸ் உங்களுக்கு ஸ்லிப் வேண்டுமா? என்று கேட்டார். அதிக ரன்கள் அடிக்கவில்லை என்பதால் நாங்கள் அட்டாக் செய்து விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கருதினோம். கடந்த போட்டியில் நான் 4 ஓவரில் 56 ரன்கள் கொடுத்தேன்.
ஆனால், இன்று என்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்த நான் அசத்த முடியும் என்று எனக்கு நானே ஆதரவுக் கொடுத்தேன். எப்போதும் நான் பேட்ஸ்மேன்களை எப்படி அவுட்டாக்கலாம்? என்ற மனநிலையைக் கொண்டுள்ளேன். அதற்காக வேகத்தை மாற்றிய என்னை பேட்ஸ்மேன்கள் அடிக்க நினைத்தால் அதற்கு அவர்கள் முயற்சிகளைப் போட வேண்டும்.
இது போன்ற வெற்றிகளை நீங்கள் பெறும் போது உங்களுடைய அணியின் தன்னம்பிக்கை உச்சமாகும். பஞ்சாப் அணிக்காக இது என்னுடைய முதல் ஆட்டநாயகன் விருது. என் மீது நம்பிக்கை வைத்து எனது திறமைகளுக்கு நான் ஆதரவுக் கொடுக்கிறேன். அப்போது தான் என்னால் வெற்றிகரமாக அசத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.