பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபைக்கு உட்பட்ட ராபர்ட்சன்பேட்டை பகுதியில் குவெம்பு பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் கிராமப்புற பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இதனிடையே, கடந்த 4 நாட்களுக்கு மேலாக பஸ் நிலையத்தில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன. நகரசபை தூய்மை பணியாளர்கள் பஸ் நிலையத்திற்கு சுத்தம் செய்ய வந்தாலும், குப்பை கழிவுகளை அகற்றாமல் சேமித்து வைத்து வந்தனர். இதனால், பஸ்நிலையத்திற்கு வந்த பயணிகள் அவதி அடைந்து வந்தனர். மேலும், பஸ் நிலையத்தில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் குவிந்திருந்தது. இது பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் குப்பை, கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து கொடுக்க நகரசபை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான செய்தி நேற்று ( 15-4-2025) ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியிடப்பட்டது.
அதேபோல், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குப்பை கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதற்கு பொதுமக்கள் நகரசபை நிர்வாகத்திற்கும், தினத்தந்தி நாளிதழுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.